திணைக்கு வகுத்த துறைச் சின்மை பற்றிய கருத்தோட்டங்களை அறிவீர். தலைவனுக்கு ஒரு தோழனும் தலைவிக்கு ஒரு தோழியும் ஐந்திணையில் வரும் காரணமும், வெறியாட்டு, அலர், அறத்தொடு நிற்றல் துறைகளின் செந்நலமும் விளங்கும். தலைவியின் உடன் போக்குக்கு அவள் தன் தாய்முன் நிற்க அஞ்சும் அச்சமே காரணமாம். உணர்ச்சியுடைய களவுக் கைக்கோள் ஒப்ப உணர்வுடைய கற்புக் கைக்கோளும் இலக்கியத்துக்கு ஏற்ற பொருளாகப் புலவரால் போற்றப்பட்டது. தலைவனது வண்டுத்தன்மையை சான்றோர் உடன்பட்டிலர் என்பது வாயில் மறுத்தல் வாயில் நேர்தல் என்ற துறைகள் காட்டும். இன்ன பொதுப்பட்ட ஆய்வுகளை இவ்விரண்டாவது இயலிற் கண்டுகொள்க. 3. அகத்திணைத் தோற்றம் என்னும் இயற்கண், அகத்திணை தோன்றிக் கூர்ந்த வரலாற்றைச் சமூக, நில, உளவியல்கள் பற்றிய அடிப்படையில் காட்டுவன. சங்க இலக்கியம் அகத்திணைக்குத் தொடக்க இலக்கியம் அன்றேனும், தோற்றப் பழமையை நோக்கத் தொன்மை பிந்தியதேனும், யான் மேற் கொண்ட அகவொழுக்க ஆராய்ச்சிக்கு வேண்டிய சான்றூட்டம் நல்கவல்லது. பழந் தமிழினத்தின் எண்ணம் செயலெல்லாம் வாழும் உலகியல் நோக்கின. அகத்திணைக்குப் பாடுபொருளான பால்வேட்கை தமிழ் மன்பதையின் வாழ்வுக் கோளொடு முற்றும் இயைந்தது. அகவிலக்கிய மாளிகைக்கு வேண்டும் கட்டுமானப் பொருள்கள் தமிழ்ச் சமுதாயத்திலிருந்தே கொள்ளப்பட்டவை. களவுமுறை நாடெங்கும் காணக்கிடந்த ஓரொழுக்கமாகும். அதற்குத் தமிழ்ச் சமுதாயம் ஊட்டமொழி ஒப்புதல் அளித்தது. ஒவ்வொரு கற்பும் களவின் வழிப்பட்டதுவே என்றும், களவின் வழிவந்த கற்பேதான் சிறப்பினது என்றும் பலர் கொண்டிருக்கும் கருத்து தமிழல் நெறி என்க. களவின்வழி வராது பெற்றோர் தாமே முடித்த மரபுத் திருமணங்கள் சமுதாயத்தாலும் சான்றோராலும் மேலாகவே மதிக்கப்பெற்றன. பெண்ணொருத்தி குமரிமை கழிந்து மனைவிமை எய்தினாள் என்பதனைக் காட்டும் செய்குறியே காரணமாம். சிலம்பு கழித்தலும் மலரணிதலும் பண்டு நடைமுறையில் இருந்த காரணங்களாவன. பழந்தமிழோர் நிலத்திணைக் காட்சியும் அறிவும் மிக்கவர். அன்னவர் நிலனோக்கும் உலக வாழ்வையே கண்ணியது. அகத்திணைத் தோற்றத்தில் சமய சாதிகளுக்கு என்னானும் இடமில்லை என்பது தெளியத்தகும். அகத்திணை யிலக்கியத்துத் தலைவன் தலைவியாகப் பாலைத்திணை மக்கள் பாடப் பெறவில்லை. சங்க காலத் தமிழகத்துக்குப் பிறநாடுகளோடு கடல் வாணிகம் நன்கு இருந்தும், இவ்வாணிகங் கருதி ஆண்மக்கள் தலைவியரைப் பிரிந்திருந்தும், கடற்பிரிவை ஒரு சிறந்த பிரிவு |