பக்கம் எண் :

282தமிழ்க்காதல்

     நன்முல்லையார் இயல்பில் மருதநிலை வாழ்க்கையர். “பிண்ட நெல்லின்”
என்ற ஊரடையைக் காண்க. ஒரு தலைமகனது தண்டாப் பரத்தமையை
உள்ளுறையாக வடிப்பர். எருமை நிலையான தொழுவத்தை வெறுத்து
நள்ளிரவில் கட்டுத்தளையை அறுத்து முள்வேலியைக் கொம்பினால்
நீக்கிவிட்டு வயலுக்கு ஓடுகின்றது. அதன்வேகத்தால் மீன்கள் கலங்கியோடின.
வள்ளைக்கொடிகள் மிதிபட்டன. இங்ஙனம் தாறுமாறாக நடந்து வண்டுகள்
மொய்க்கும் தாமரை மலர்களை ஆசையோடு அருந்துகின்றது. அன்ன எருமை
வாழும் ஊரவன் தலைவன்.     சேற்றுநிலை முனைஇய செங்கட் காரான்

    ஊர்மடி கங்குலின் நோன்தளை பரிந்து
    கூர்முள் வேலி கோட்டின் நீக்கி
    நீர்முதிர் பழனத்து மீனுடன் இரிய
    அந்தூம்பு வள்ளை மயக்கித் தாமரை
    வண்டூது பனிமலர் ஆரும் ஊர
    யாரையோ நிற் புலக்கேம்                    (அகம். 46)

என்று எருமைமேல் வைத்துத் தலைவனது இன்பவிழிவுகளைத் தோழி
இடித்துரைக்கின்றாள்; இவ்விழிவுகளை நேர் சொல்லால் கூறுவது
நாகரிகமாகாது. நாணுடைய நாசொல்லாது. உள்ளுறை மருதத்திணையிற்
பயின்று வருவது போல் பிற திணைகளில் வருவதில்லை;
வரவேண்டுவதுமில்லை. நாணில் செயல்களை நாணுடைய மொழிகளால்
புலப்படுப்பது உள்ளுறை. சுருங்கச் சொல்கைக்கு ஆற்றல் உண்டு. கேட்டார்
மனந்தாக்கும் கூர்மையுண்டு. ஆதலின் உள்ளுறை பண்பட்ட தமிழ் இலக்கியக்
கருவி, தலைவனை இடித்துரைக்குங்காலை இக் கூர்ங் கருவியை இலக்கியர்கள்
ஆளுவர். புலவன்தான் புலப்படுத்த எண்ணும் கருத்தோட்டத்திற்குத் தக
இயற்கையைச் சரிபடுத்திக் கொள்வான், ஒழுங்குற ஆக்கிக் கொள்வான் என்று
மூன்றாவது இயலிற் கற்றிருக்கின்றோம். அதற்கு இப் பாட்டு ஓர் மேற்கோள்.
அகத்திணையில் எத்துறை பற்றியும் எப்பாற் புலவரும் பாடலாம்.
அத்துறையிற் காதற் பொருள் பாடியவர்தம் வாழ்க்கையில் நிகழ்ந்ததாகக்
கருதப்படமாட்டாது. ஆதலின் நன் முல்லையார் பரத்தையிற் பிரிவுபற்றிப்
பாட முன் வந்தார் என்று அறிக.


     அகத்திணை மாந்தர்களில் ஆணாட்களும் உண்டு. பெண்ணாட்களும்
உண்டு. புலவர் எம் மாந்தரையும் பாடலாம். தலைவன் தோழன் முதலான
ஆண்மாந்தர்களை ஆண்பாற்புலவர் பாடும்போது ஆணுள்ளம் நன்கு
வெளிப்படும் எனவும், தலைவி தோழி செவிலி முதலான பெண்
கூற்றுக்களைப் பெண்புலவர்கள் பாடுங்கால் பெண்மனம் இயல்பாக விழும்
எனவும் பொதுவாகக்
கொள்வதில் தவறில்லை.