தமிழ் நூல்களுள் தொன்மையான அகவிலக்கியம். இலக்கிய இலக்கண ஆராய்ச்சி, காதலர்கள் போல தம்முள் பிரிந்து நில்லாதவை; பிரிக்க முடியாதவை; வலிந்து பிரித்தால் வளப்படாதவை. ஆதலின், அகவிலக்கியமும் அகவிலக்கணமும் சங்கநூற் செல்வங்களின் பெருந்துணை கொண்டு ஒருங்கு ஆராய்தற்குரியன. ஆயுந்தோறும் மேலெண்ணிய ஐயச் சிக்கல்கள் ஒருவாறு அறுபடக் காண்பீர். அகத்திணைப் பிரிவுகளின் அடிப்படை 1.கைக்கிளை 2.குறிஞ்சி 3.முல்லை 4.மருதம் 5.நெய்தல் 6.பாலை 7.பெருந்திணை எனப்பட்ட ஏழும் அகத்திணைப் பாகுபாடாம். இவற்றுள் குறிஞ்சி முதல் பாலை இறுதியாகிய இடைநின்ற ஐந்தும் ஐந்திணையென ஒரு கூட்டாக வழங்கப்படும். இப்பிரிவுகளுக்கு அடிநிலைக் காரணம் யாது? கைக்கிளையாவது ஒருதலைக்காமம் என்றும், ஐந்திணையாவது ஒத்த காமம் என்றும், பெருந்திணையாவது ஒவ்வாக்காமம் என்றும் அறிந்தோர் சொல்லுவர். இங்ஙனம் காமத் தன்மைகள் அடிப்படை ஆகுமாயின், ஐந்திணையை ஒரே பிரிவாகக் கொண்டு, அகத்திணைப் பிரிவுகள் மூன்றெனல் பொருத்துமேயன்றி ஏழெனல் பொருந்தாதுகாண். மேலும், கைக்கிளை பெருந்திணை என்னும் பெயர்க்குறிகள் தம் காமத்தன்மை சுட்டும் கை, பெரு, அடைகள் பெற்றுள. அது வொப்ப அன்புத்திணை என்ற பெயரன்றோ ஐந்திணைக்கு வருதல் வேண்டும்? ஐந்திணை என எண்ணடையிருத்தல் ஒக்குமா? ஆதலின் அகப்பிரிவுகட்குக் காமத்தன்மை அடிப்படையாகாது. தமிழ் அகத்திணை கூறும் பல்வேறு காதற் கூறுகள் தமிழகத்தின் பல்வேறு நிலக்கூறுகளைச் சார்ந்து எழுந்தவை என ஒரு கோட்பாடு உளது 1. நம் தாயகத்துப் பாலை என்று சுட்டிக் காட்டத்தக்க நிலப்பால் இல்லை (தொல்.947) குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என்ற நாற்றிணைகளுக்கே இயல்பான நிலப்பாங்குகள் உள. இதனால் நானிலம் என்பது உலகிற்கு ஒரு பெயராயிற்று. பாலைக்கு இயல்நிலம் இன்றேனும், திரிநிலம் உண்டு என்றும், காடும் மலையும் கோடைத் தீ வெப்பத்தால் தத்தம் பசுமை இழந்த திரிநிலையே பாலை என்றும் சிலப்பதிகாரம் நன்கு தெளிவுபடுத்தும். வேனலங் கிழவனொடு வெங்கதிர் வேந்தன் தானலந் திருகத் தன்மையிற் குன்றி முல்லையும் குறிஞ்சியும் முறைமையிற் றிரிந்து நல்லியல் பிழந்து நடுங்குதுய ருறுத்துப் பாலை யென்பதோர் படிவங் கொள்ளும் (சிலப்.15, 95-9) ____________________________________________________ The Ancient Tamils, Part 1; p. 46. S.K. Pillai. |