பக்கம் எண் :

அகத்திணைப் புலவர்கள்357

நாணுடைத் தலைவன்

     புலவரின் களவுப் பாக்கள் சிலவாயினும், அவை அவர்தம்
கற்புப்பாக்களை அறிதற்குத் துணையாவன. களவுத் தலைவன் மிக
நாணுடையன். தன் காம வேட்கையை வெளிப்பட்ட சொல்லால் சொல்லக்
கூசுகின்றான். நாள் தொறும் வருகின்றான். வாய்வாளாது திரும்புகின்றான்.
நெய்தல் நிலத்தில் காதற் காட்சிகளைக் காணுந்தொறும் அவன் நெஞ்சம்
காமப்புண் உறுகின்றது. உற்றதை உரைக்கவோ நா எழவில்லை. காமம்
உறாதபடி காக்கவோ நெஞ்சுக்கு வலுவில்லை. காமம் என்றும் பின்வாங்காது,
காதலுணர்வுக்கு அயர்வில்லை. காதல் நெறியில் ஒருகால் உள்ளம் ஓடிவிடின்,
உரியாரை எய்தும் வரை ஓடிக் கொண்டிருக்குமல்லது, திரும்பாது,
உரியார்க்குப் புலனாக்காவரை உள்ளம் ஒடுங்காது. வாய்சொல்ல அஞ்சும்
எனினும், அஞ்சும் சொல்லில் காதல் விளங்கும். மெய் நெருங்க அஞ்சும்
எனினும் அந்நிலையில் காமத் துடிப்பு வெளிப்படும்.     

   
முன்னாட் போகிய துறைவன் நெருநை
    அகலிலை நாவல் உண்துறை உதிர்த்த
    கனிகவின் சிதைய வாங்கிக் கொண்டுதன்
    தாழை வேரளை வீழ்துணைக் கிடூஉம்
    அலவற் காட்டி நாற்பாற் றிதுவென
    நினைந்த நெஞ்சமொடு நெடிபெயர்ந் தோனே
    உதுக்காண் தோன்றும் தேரே இன்னும்      (அகம். 380)

தோழி தலைவிக்குத் தலைவனது உள்ளோட்டத்தைப் புலப்படுத்தும் பாட்டு
இது. “வந்து வந்து போகும் அன்பன் நேற்று ஒன்று செய்தான். துறையில்
நாவற் பழங்கள் உதிர்ந்து கிடந்தன. பழுத்த கனியொன்றை ஆண் நண்டு
எடுத்துக் கொண்டுபோய் வளையில் இருக்கும் மனை நண்டுக்குக்
கொடுத்தளிப்பதைக் கண்டான். அதனை எனக்குக் காண்பித்து. ‘இதுவன்றோ
நல்ல செயல்’ என்று சிலசொற் சொல்லி, மேலொன்றும் சொல்ல வாராது
எதனையோ எண்ணிக் கொண்டு போய்விட்டான். இன்று இதோ
வருகின்றான்” என்ற தோழி கூற்றில், தலைவனது அடக்கத்தைக்
காண்கின்றோம். இளநாகனார் புனையும் களவுத்தலைவனது பண்பு இது.

நாணில் தலைவன்

     புலவர் பாடுதற்கு மிகுதியும் மேற்கொண்ட உரிப்பொருள் மருதப்
பரத்தமையாம். அதனாற்றான் மருதன் இளநாகனார் என்ற சிறப்புப்பெயர்
பெற்றார். அகத்திணையின் முதல் கரு உரி என்ற மூன்றும் பாடவல்லவர்
எனவும், அகத்திணைக்கு இன்றியமையாத உள்ளுறையுவமம் அமைக்க
வல்லவர் எனவும் அறிகின்றோம். தலைவனது பரத்தமை வளர்ச்சிக்கு
மருதக்கலி அடுக்கிச்