பக்கம் எண் :

356தமிழ்க்காதல்

     பேயனார் ஒரு துறைமேல் பல பாடல் எழுதியவர் என்று முன்னர்க்
கண்டோம். பருவம் கண்டு கிழத்தி உரைத்த பத்து, தோழி வற்புறுத்த பத்து.
பாணன்பத்து, தேர்வியங்கொண்ட பத்து, வரவுச் சிறப்புரைத்த பத்து என்ற
வகையில் சிலதலைப்புக்கள் அமைந்துள்ளன. இத்தலைப்புக்கள் அளவில்
நோக்கும் போது, கருத்துத் தொடர்ந்து இயங்குவதைக் காணலாம். இன்னும்
கூர்ந்து தலைப்பினுள் வரும் பாடலின் துறைகளைக் காண்போமேல், கருத்துத்
தொடர்ச்சி இல்லை என்பதும், வேறுபட்ட நெஞ்சுப் புனைவு என்பதும்
அறியப்படும். செவிலி கூற்று என்னும் துறையில் வரும் செய்யுட்கள் போதும்
பேயரின் புலமைப் பண்பினைக் காட்டுவதற்கு. குழந்தையுடன் குடும்பமாகவும்
குடும்பத்தைப் பிணிக்கும் குழந்தையாகவும் பரத்தமை நினையாக்
காதலனாகவும், பிரிவறியாக் காதலியாகவும், யார்க்கும் வழிகாட்டும்
இல்லியாகவும் முதற்பத்துப் பாடல்களை வடித்த பெருமையர் பேயனார்.
புதல்வனை நடுவிற் கிடத்தித் தலைவனும் தலைவியும் படுத்துள்ளனர்.
இக்காட்சி எவ்வுலகத்தும் காண அரியது என்று உவக்கின்றாள் செவிலி.
மகனுக்குப் பால்கொடுத்துக் கொண்டிருக்கும்போது, அவள் முதுகுப்புறத்தைத்
தழுவுகின்றான் தலைவன். அவளும் தன் காதலன் மகனை எடுத்து
கொண்டிருக்குங்கால் இருவரையும் சேர்த்து அணைக்கின்றாள். மகன்
விளையாடும் பொழுது காதலியை அணைத்து இனிதிருந்து காண்கின்றான்.

    மாலை முன்றிற் குறுங்காற் கட்டில்
    மனையோள் துணைவி யாகப் புதல்வன்
    மார்பின் ஊரும் மகிழ்நகை இன்பப்
    பொழுதிற் கொத்தன்று மன்னே
    மென்பிணித் தம்ம பாணனது யாழே. (ஐங். 410)


மாலைக் காலத்து வீட்டின் முற்றத்தில் ஒரு சிறிய கட்டில், மனைவி
அருகிருக்கத் தலைவன் அக்கட்டிலிற் படுத்துள்ளனன். இளஞ்சிறுவன் தந்தை
மார்பில் ஏறி விளையாடுகின்றான். அவ்வமயம் பாணன் யாழ் வாசிக்கின்றான்.
இவ்வாறு அகக் காதலர்தம் பொழுதுபோக்கையும் இசைக்கலை யுணர்வையும்
இலக்கியப்படுத்துவர் புலவர். அவர் காட்டும் இல்லறக் காட்சி
புனைந்துரையன்று. இன்றும் பலர்தம் வாழ்விற் காணத்தக்க இயல்புக்
காட்சியேயாம்.

29. மருதன் இளநாகனார்

     74 அகப்பாக்களின் படைப்பாளர் இளநாகனார். மருதக் கலி இவர்தம்
ஒப்பற்ற இலக்கியக்கொடை. அகநானூற்றில் 23, நற்றிணையில் 12,
குறுந்தொகையில் 4, கலித்தொகையில் 36 ஆக இவர் பாடல்கள் உள. களவு
பற்றியன 16; கற்புப் பற்றியன 58. திணை ஐந்தும் பாடவல்ல பெற்றியராக
விளங்குகின்றார் இளநாகர்.