பக்கம் எண் :

அகத்திணைக் கல்வி373

காமப்புணர்ச்சி

     அகத்திணை இலக்கியத்தில் பன்மாணும் விரித்துப் புனையப் பெறுவது
ஏனையதாகிய காமப்புணர்ச்சியே. புணர்தல் பிரிதல் இருத்தல் இரங்கல்
ஊடல்களும் இவற்றின் நிமித்தங்களும் எல்லாம் காமப்புணர்ச்சியின் கூறுகளே.
முதல் கருவெல்லாம் காமப்புணர்ச்சியின் விரிவுகளே. காமம் பிறப்பின்
இயல்பானது, நல்லது, இனியது, இன்றியமையாதது என்பது தமிழியம்.
காமத்துறையில் எண்ணங்களை எண்ணுவது எப்படி? சொல்லுவது எப்படி?
புறச்சூழ்நிலைகளைப் பயன்கொள்வது எப்படி? புணர்வைத் துய்த்தும்
பிரிவைப் பொறுத்தும் வாழ்வது எப்படி? என்ற அறிவுரைகளை அகப்பாட்டுக்
கற்பிக்கின்றது. ஆண்பாலின் பெருமிதத்தையும் உரனையும் மனைவி
மதிப்பதும், பெண்பாலின் அருமையையும் நிறைவையும் நாணத்தையும்
கணவன் மதிப்பதும் ஆகிய கல்வியை அகத்தாற் பெறலாம்.

     உலக வளர்ச்சி பசியால் உண்டு; உள்ள வளர்ச்சி காமத்தால் உண்டு.
அரும் பெருஞ் சான்றோர் சிலர் ஞால நலங்கருதிப் பசி நோற்கலாம், காமம்
நோற்கலாம். இஃது இயற்கையும் அன்று; உயிர்ப் பொதுவிதியும் அன்று.
பசியும் காமமும் நிறையா உணர்ச்சிகள். இவற்றுக்குத் திங்கள் போல் நிறைவும்
குறைவும் மாறி மாறி வரும். மாறிமாறிவரும் இச்சூழ்ச்சியால் ஞாலம்
வாழுகின்றது. உயிர்கள் பிறந்து வாழ்கின்றன. சங்ககாலம் காமவின்பத்தை
மாசற்ற இன்பம் எனப்போற்றி வளர்த்தகாலம். அதனால் காம
மெய்ப்பாடுகளை மெய்ப்பாட்டியலில் தொல்காப்பியர் வகைபட நூற்பித்தார்.
சங்கப்பாட்டு எதுவும் அன்புக் காமத்தை இழிவெனச் சுட்டியதில்லை.

    
நோதக் கன்றே காமம் யாவதும்
    நன்றென உணரார் மாட்டும்
    சென்றே நிற்கும் பெரும்பே தைமைத்தே     (குறுந். 78)


என்பது பாங்கன் தலைமகனைக் கழறிய பாட்டு. “தன்னை விழைந்தார்
விழையாதார் என்று பாராது காமம் யார் மேலும் செல்லும்; அங்ஙனம்
செல்வது பெரிய மடமை. ஆதலின் அக்காமவுணர்ச்சி வெறுக்கத்தக்கது,
கைவிடத்தக்கது” என்பது பாங்கன் இடிப்புரை. ஒருவன் ஒருத்திபால் காமம்
செலுத்துகின்றான்; அவளும் அதனை நல்லது என்று ஏற்று உணர்கின்றாள்;
எனின் அக்காமம் விரும்பத்தகுவது, அறிவுடையது என்ற குறிப்பு இப்பாட்டிற்
கிடைக்கவில்லையா? தலைவன் தன் புதிய உணர்ச்சியை வந்து சொல்லியபோது,
“இவ்வுணர்ச்சி அவளுக்கும் தோன்றியிருக்குமா? தோன்றி இருக்கும் என
இவன் கருதுவது ஒக்குமா? இருபால் ஒப்பு இன்றெனின் காமம் பழியும்