பக்கம் எண் :

374தமிழ்க்காதல்

கேடும்தருமே” என்ற நினைவினால், பாங்கன், “நோதக்கன்றே காமம்”
என்றான். காமத்தை இழிப்பது அவன் நோக்கம் அன்று; உணர்வொப்பு
வேண்டும் எனச் சுட்டிக் காட்டுவதே அவன் நோக்கம்.     

   
காலையும் பகலும் கையறு மாலையும்
    
ஊர்துஞ்சு யாமமும் விடியலும் என்றிப்
    பொழுதிடை தெரியிற் பொய்யே காமம்   (குறுந். 32)


என்பது ஒரு களவுத் தலைவன் மொழிவு. களவான மறைவொழுக்கம் ஆதலின்
நினைத்தாங்கு இன்பம் அவனாற் பெற இயலவில்லை. தலைவனை விரைவில்
வரையச் செய்யவேண்டும் என்ற கருத்தால் இரவுக்குறி பகற்குறிக்கு
இடஞ்செய்யாது கழிக்கின்றாள் தோழி. காமம் புதிது துய்த்த தலைவனுக்கு
ஓரிரு புணர்ச்சிகளால் வேட்கை மிக்கதே யன்றித் தணியவில்லை. பொழுது
பாராது இன்பம் எய்தவேண்டும், பிரிவு என்பது கூடாது என்பது அவனது
விழைவு. எண்ணியது கைகூடாமையின் “பொய்யே காமம்” என்று கசந்தான்.
பொழுது இடையின்றி ஐம்பொழுதும் தலைவியைப் பெற முடியுமெனின், காமம்
மெய்யே என்பது அவன் உள்ளெண்ணம்.     

   
பயனின்று மன்றம்ம காமம்      (கலி. 142)
    கனவின் நிலையின்றாற் காமம்   (கலி. 145)
    அரைசினும் அன்பின்றாற் காமம் (கலி. 146)


என்பன பெருந்திணைத் தலைவியின் பிதற்றல்கள். கணவன் பிரிவினால்
நாணிழந்தாள். நிறையிழந்தாள், ஊரறிய உற்றது உரைத்தாள். ஆராக்
காமவேட்கை, இப்பழம் புளிக்கும் என்றது போல வெறுப்பை விளைக்கின்றது.
அதுவல்லது அந்நங்கை காமத்துறவு பூண்டாள் என்பது கருத்தன்று. நுனிக்
கொம்பளவும் ஏறி வீழ்பவன் மரம் ஏறுவது கூடாது என்றல் போல, முதுமொழி
கூறுகின்றாள் காமம் காழ்த்த மங்கை. கணவன் வந்த பின்றை விடாக் காமம்
உண்ண வேண்டும் என்பது அவள் வேட்கை.

காம மதிப்பு

     காதலன் தன் காதலியின் காமக்கூறுகளையும், அவள் அவன்தன் காமக்
கூறுகளையும் புரிந்துகொண்டு ஒழுக வேண்டும். சொல்லித் தெரியவேண்டும்
என்று வாளாவிராது, சொல்லிய சொல்லுள்ளும் சொல்லாத சொல்லுள்ளும்
நாடி உணர வேண்டும். உணராக்குறை ஒருகோடி கேடுதரும். காமக்
குறைவினால் இல்லறம் கெடும்; அக்குறைவுடையார் அணை கடந்த
வெள்ளம்போல ஊரையும் நாட்டையும் உலகத்தையும் கெடுப்பர். அத்தகை
கேடுகளுக்கு மூலகாரணம் இன்பக்குறை என்பதை யார் அறிவார்? நாளாயின்
அவரே அறியார்காண். ஆதலின் ஒருவனுக்கும் ஒருத்திக்கும் இன்பநிறைவு
வீட்டிற்கும் நாட்டிற்கும் நல்லது. இந்நிறைவுக் கல்வியை அகத்திணையில்
காண்கின்றோம்.