| கொடுப்போர் இன்றியும் கரணம் உண்டே புணர்ந்துடன் போகிற காலை யான (தொல். 1088) என்று வலியுறுத்தல் காண்க. காதற்களியினர் திருமணங்கொள்ளக் குறுக்கே நிற்காச் சமுதாயம் எது? அன்னவர் கட்டாயம் மணப்படுமாறு சூழ்நிலை அளிக்கும் சமுதாயம் எது? அதுவே தூய திருமணக் கட்டுப்பாட்டை உணர்ந்த சமுதாயமாம். உலகத்து உய்யும் சமுதாயமாம். கரணம் வேண்டும், அது யாதாகவும் இருக்கலாம்; கொடுப்போர் வேண்டும், உடன் போக்கில் அவர் வேண்டுவதுமில்லை; எங்ஙனமும் திருமணம் கொள்க என்று தளரத்தக்கதைத் தளர்த்தி வலியுறுத்தத் தக்கதை வலியுறுத்தும் தமிழ்ச் சமுதாயத்தின் அகநாகரிகத்தை நாம் விளங்கிக் கொள்வோமாக. காதற்களவினர் எவ்வாற்றானும், ஒரு குடியாகிச் சமுதாயவுறுப்பினராதல் வேண்டும் ஆதலின் தமிழினத்தின் திருமணவாயில் யார்க்கும் நல்வரவு கூறும் அடையாத அகலக் கதவுடையது. அதன் ஐந்திணைக் கொள்கை அன்புடைக் காதலோரை ஐ விரல்களையும் அகல விரித்து அணைக்கும் அறமுடையது. உடன்போகிய தலைமகன் உடன் போய ஊரில் தலைமகளைக் கரணஞ் செய்து வரைந்து கொண்டான்; தன்னூர் திரும்பினான்; ஏதிர்சென்று தோழி வரவேற்றாள். திருமணம் முடிந்ததை இவள் சுற்றத்தார்க்குத் சொல்லுக என்று தலைவன் உரைத்தபோது, ‘இச்செய்தி முன்னரே எனக்குத் தெரியும். தாய்க்கு அறிவித்து விட்டேன்.’ வரைந்தனை நீயெனக் கேட்டு யான் உரைத்தனென் அல்லெனோ அஃதென் யாய்க்கே (ஐங். 280) எனத் தோழி சட்டென மறுமொழிந்தாள் என்பதனால், பண்டைத் தமிழகத்தில் இனிய எளிய மணமுறை நிலவியமை தெளிவு. களவு கற்பு என்னும் ஐந்திணைக் கைகோள் இரண்டனுள் கற்பு மக்கள் எல்லோரும் எய்துதற்குரிய பேரறமாம். இது களவுபோல இலக்கியவூற்றுக்கும் கற்பனைப் பரப்புக்கும் இடந்தராது என்று பொதுவாகக் கருதினும், பாடுதற்குத் தரமான பொருள் இல்லை என்று அத்துணை எளிதாகத் துணிந்துவிட வேண்டா. புலவர்கள் குறிக்கோள் உடையவர்கள். அக் குறிக்கோளைப் பதியவைப்பதற்கு அன்னவர் கையாளும் இலக்கியக் கருவியே கற்பனை யென்பது. கற்பொழுக்கத்தைக் காட்டிலும் சிறந்த சமுதாயக் குறிக்கோள் யாண்டுண்டு? சங்கவிலக்கியத்துக் கற்புத்திணையைப் பாடிய புலவர் தொகை 233 ஆகவும், அத்திணைப் பாடற்றொகை 966 ஆகவும் காண்கின்றோம். களவுத் திணைக்கோ 882 பாடல்களே உள. இவற்றைப் பாடியோர் தொகை 236. இவ் வொப்புமையால் சங்கச் சான்றோர் களவுத் துறைகள் போலக் கற்புத் துறைகளையும் இலக்கியம் பாட மதித்தனர் என்பது வெளிப்படும். |