பக்கம் எண் :

அகத்திணைப் பாகுபாடு79

ஒழுக்கமில்லுரை எழுதியிருக்கிறார் என்று வரைய என்கோல் நடுங்கினும்,
எடுத்துக் காட்டினாற்றானே தெரியும் என்ற முறையால், எழுத என் மனம்
ஒப்புகின்றது. “கரணப்படி முதல்நாள் திங்களுக்கும் இரண்டாம் நாள்
கந்தருவருக்கும் மூன்றாம் நாள் அங்கிக்கும் தலைவியை அளிப்பார்களாம்!
இத்
தெய்வங்களோடு அவள் பள்ளி செய்து ஒழுகுவாளாம்; இந் நாளெல்லை
முடிந்த காலத்து’ அங்கியக்கடவுள் நான்காம் நாள் தலைவனுக்குத் தலைவியை
அளிப்ப, அவன் அவளை நுகர்வானாம்; வரைந்தபின் மூன்று நாளும்
கூட்டமின்மையால் நிகழ்ந்த மனக்குறை, நெஞ்சு தளை-நாலாம் நாள் இரவின்
புணர்ச்சியால் தீருமாம்; இது வேத வழக்கு எனத் தலைவன் தலைவிக்கு
விளங்கக் கூறுவானாம்’ என இவ்வாறு நச்சினார்க்கினியர் கருத்துரை
செய்துள்ளார் (தொல். 1091-அடி 1-2;10-11 உரைகள்). தமிழர் கண்ட கற்பியல்
இதுவா? தமிழினத்தின் நாகரிக ஏடான தொல்காப்பியத்துக்கு உரையா இது?
இக் கருத்தெல்லாம் அல்தமிழ் நெறியென்று அகற்றுக.


     உடனிருந்து துய்க்கும் இன்பியல் வாழ்க்கை ஆண்டுக் கணக்காக
நீடித்தற்கில்லை. கடமைகளைச் செய்து குடும்பம் நடத்துதற்குப் பொருள்
வேண்டும். அதனை வேற்றூர் சென்றும் வேற்றுநாடு சென்றும் ஈட்டுதற்குத்
தலைவியைப் பிரிவான் தலைவன். இப்பிரிவு இன்றியமையாத உலகியல்
அறமாகும். இன்பவுணர்வு பெண்ணைக் காட்டிலும் ஆணுக்கு அதிகம் என்பர்
உயிர் நூலார்; எனினும் சமுதாயத்தில் ஆடவனுக்கு வகுக்கப்பட்டுள்ள புறக்
கடமைகளும் புகழுணர்ச்சியும் அவனது இன்ப நாடியை மெலிதாக்குகின்றன.
காதலெண்ணத்தைக் கலைக்கின்றன. நெடுநாட்புணர்வை இடையறுக்கின்றன.
“பெருமையும் உரனும் ஆடூஉ மேன (தொல்.1043) பெருமை நோக்கமும்
மனத்திட்பமும் ஆண்பாலுக்கு உரிய பண்புகள் என்று தொல்காப்பியர்
சுட்டுவர். ஆதலின் நீடிய காமத்தில் அழுந்திக் கடமை குறைதலும்
வறுமைப்படுதலும்
தலைவனுக்கு உளவாகா. பொருளாவது கடமையை
எளிமைப்படுத்தும் கருவி. இக் கருவியை ஈட்டுவதற்குத் தலைவர்கள்
தலைவியர்களை விட்டுப் பிரிப. பொருள்வயிற்பிரிவு என்னும் இத்துறை சங்கப
புலவர்களின் நெஞ்சை அள்ளிய துறைகளுள் ஒன்று. இன்பமும் கடமையும்
போராடும் இடமாக, நல்ல உணர்ச்சிகள் மோதிக்கொள்ளும் இடமாக இத்துறை
அமைந்திருப்பதைக் காணலாம்.


     நட்டோர் இன்மையும் கேளிர் துன்பமும்
     ஒட்டா துறையுநர் பெருக்கமும் காணூஉ