நாம் நுகர்தற்கும் இவ்வியல்பே ஏதுவாம். ‘துன்பத்தில் தோன்றும் இன்பம் இன்பத்தில் தோன்றும் இன்பத்தினும் இனிமை மிக்கது’ என்று ஆங்கிலப் புலவர் செல்லி ‘கவிதைப் காப்பு’ என்னும் நூலில் இலக்கியச் சுவையின் நுண்ணிய மனப் பாங்கினை விளக்க முயல்வர்.1 இம் மனத்திறத்தினை நிலைக்களனாகக் கொண்டு எழுந்தவைகளே பாலைத்திணைப் பாடல்கள். தலைவன் பிரிவிலும் தலைவியின் அவலத்திலும் நாம் இலக்கிய வுரத்தையும் இன்ப நயத்தையும் காண்கின்றோம். தலைவன் பிரிந்து போவேன் என்று அடிக்கடி சொல்லியும் போகாதிருந்தான். பின்னொரு நாள் போவேன் என்று உரைத்தபோது, வழக்கம்போல் சும்மா சொல்லுகின்றான் என்று எண்ணிய தலைவி, போய்வாருங்கள் என்று தானும் வழக்கம்போல் மொழிந்தனள். இத் தடவை அவள் இசைவு தந்தாள் எனக் கருதிக்கொண்டு தலைவன் உடனே புறப்பட்டு விட்டான். எதிர்பாரா இப்பிரிவு அவளால் தாங்க முடியுமா? அழுதாள், ஆறாகக் கண்ணீர் பொழிந்தாள். குளமாகப் பெருக்கெடுத்தது. முலைகள் கரைகளாக அமைந்த கண்ணீர்க் குளம் நாரைகள் மேயும் நன்னிலமாயிற்று: சேறும் சேறும் என்றலிற் பண்டைத்தன் மாயச் செலவாச் செத்து மருங்கற்று மன்னிக் கழிகென் றேனே அன்னோ! ஆசா கெந்தை யாண்டுளன் கொல்லோ? கருங்கால் வெண்குருகு மேயும் பெருங்குளம் ஆயிற்றென் இடைமுலை நிறைந்தே (குறுந். 125) என்று புலவர் நன்னாகையார் தலைவியின் கண்ணீர்த் துன்பத்தில் கவிதையின்பம் விளைப்பர். துன்பத்தின் இன்பமே கவிதைக்கும் கற்பார்க்கும் சுவைக்கும் ஆதலின், சங்கச் சான்றோர்கள் பாலைத்துறைகளை விரும்பிப் பலபடப் பாடினர். கற்புச்செய்யுட்களில் மூன்றுள் இருபகுதி பாலைத் திணையாக இருப்பதை நினைவு கொள்க. இளைய மடந்தையின் இல்லத் தனிமையும், புறக்காட்சிகள் அத் தனியுள்ளத்தை அலைக்கும் அலைவுகளும், கொடிய சுரத்திடை நெடுந்தொலை சென்ற கொழுநன் இடையூறின்றி வருக என அவள் விழையும் ஏக்க வுணர்களும், அவன் திரும்பி வரும்வரை குடும்பத்தைக் குற்றப்படாது காக்கும் கடமைத் தூண்டுதல்களும் இலக்கியநிலத்தில் பாவத்தக்க நாற்றுக்களாம். இப் பாலைப் பாடல்களின்றேல்,கற்பிலக்கியம் அணையிலிருந்து வந்த ஆற்றொழுக்குப்போல உணர்ச்சி வெள்ளமும் வேகமும் இன்றித் தோன்றும். ____________________________________________________ “The pleasure that is in sorrow is sweeter than the pleasure of pleasure itself.”-Shelly: A Defence of Poetry, p. 45. |