பக்கம் எண் :

84தமிழ்க்காதல்

பருவ வரவு

     தனிமையை நினைந்து புலம்பும் மனைவிக்குக் கார் இளவேனில்
முதலான பருவங்கள் தூபமிட்டாற் போலத் துன்பத்தைப் பெருக்கும். தலைவி
பருவங் கண்டழிதல் என்னும் இவ்வொரு துறைமேல் 58 பாக்கள் உள. கார்
கூதிர் முன்பனி பின்பனி இளவேனில் முதுவேனில் என்று ஆறு பருவங்கள்
இருப்பினும், காரும் இளவேனிலுமே கணவன்மார் வீடு திரும்புவர் என்று
மனைவிமார் வரவு பார்த்திருக்கும் பருவங்களாம் (ஐங். 411-20; 341-50).
காலம் என்னும் பெருந்தோழி கடமை என்னும் விசிறி கொண்டு வீச, தனிமைத்
துயரைத் தலைவி ஒருவாறு ஆற்றியிருத்தல் உண்டு; எனினும் தலைவன்
குறித்த பருவக் கூத்து ஆடியும் அசைந்தும் வனப்போடு வருங்காலை
அவளுக்கு உறக்கம் என்பது வருமோ? காமவுணர்வு என்னும் அரும்பு
முனைகள் தளிர்த்து அவளைக் கொல்லுமன்றே.


    
அம்ம வாழி தோழி பொருள்புரிந்து
     உள்ளார் கொல்லோ காதலர் உள்ளியும்
     சிறந்த செய்தியின் மறந்தனர் கொல்லோ (அகம். 235)


பொருள் விருப்பத்தால் என் நினைவு அவருக்குத் தோன்றவில்லையோ?
என் நினைவு அவருக்கு ஒரு முறை வந்தும், இவளைவிடச் சிறந்தது
பொருளே என மீண்டும் என்னை நினைப்பதை விட்டுவிட்டாரோ? எனத்
தலைவி எதிர்பார்த்து கார்ப்பருவம் கண்டு எண்ணம் அலைகின்றாள்.
அலைவுற்ற தலைமகளை ஆற்றுவித்தல் தோழியின் கடன். இத்துறைக்கு 26
பாடல்கள் உண்டு. ‘இது
உண்மையான கார் காலம் அன்று; திடீரென வந்த
மழைப் போலி’ எனப் பொய்யாகவும் தோழி தலைவியை ஆற்றுவிப்பாள்.
இது முழுப்பொய் எனவும், தன் ஆறுதலுக்காகக் கூறப்படுவது எனவும்
தலைவியும் அறிவாளாதலின், மரபுப் பொய்யாதலின்’ இந்நெறி அகத்திணைச்
சான்றோரால் போற்றப்படலாயிற்று.


தலைவன் வரவு


     பிரிந்த தலைவி இல்லிருந்து தலைவனை அல்லும் எல்லும் நினைந்து
கவலுதல் போலச் சென்ற தலைவன் அவளை நினைந்து கவலுவானோ எனின்,
இல்லை. கவலுதல் அவன் ஆண்மைக்கும் வினைத்திறத்துக்கும் இழுக்காம்;
எனினும் காதலியை வினைமுடிக்குமளவும் நினைக்கமாட்டான் என்பது
பொருந்தாது. நினைக்கக்கூடாது என்று அறங்கூறினும், நினைப்பு வருவது
உளவியல்பு. உயிர் கலந்து ஒன்றிய தலைவியை வினையின் பொருட்டு
உள்ளத்தை விட்டு அப்புறப்படுத்தி வைக்க முடியுமா? வேண்டுங்கால் வா
என்றும், வேண்டாக்கால் போ என்றும் ஏவத்தக்க உணர்ச்சி