பக்கம் எண் :

அகத்திணைப் பாகுபாடு85

காமம் இல்லையே. ஆதலின் போர்க்குச் சென்ற தலைமகன் பாசறைக்கண்
இருந்து காதலிசை ஓரொருகால் எண்ணிப் பார்ப்பான் (ஐங். 441. 50
பாசறைப்பத்து). வருவேன் என்று சொல்லிய நாட்கள் கடந்துவிட்டன; அவன்
கண்கள் நீரைக் கொட்டுமே; எத்தனை நாள் கூந்தலை அணி
செய்யாதிருப்பாள்? என்னை அருளிலன் என்றும் அறமிலன் என்றும்
சொல்லிப் புலம்புவாளே? என்று, தலைவன் தன் வரவு பார்த்திருக்கும்
தலைவியின் அவலநிலையைத் தானே நினைந்து பார்ப்பான் (அகம். 144).
வினைமுடித்தபின் விரைந்து
வீடுதிரும்ப வேண்டும் என்று இவன் உள்ளம்
துடிக்கும். இத்துடிப்புக்கு ஈரம் வீண்போகாமல் தனக்கு உரிய நிலத்தை
உழுதுவிடப் பாடுபடும் சிறிய உழவன் மனவேகத்தை உவமிப்பர் ஒரு புலவர்
(குறுந். 131). பிரிவு நோயால் தலைவியின் கண்கள் ஒளியை இழக்கும். பசலை
நிறம் பெறும். நிறம் மாறிய மனைவியின் அருந்துயரைப் போக்குதற்குத்தன்
வருகையை முன்னே சென்று அறிவிக்க என்று தூதனைத் தலைவன்
விடுப்பான் (ஐங். 477). இதனால் அவன் அன்புடைமையும் அறிவுடைமையும்
வெளிப்படும். வினைமுற்றிய தலைமகன் தேர்ப்பாகற்கு உரைத்தல் என்னும்
துறையில் 44 செய்யுட்கள் காணப்படுவ. வினையால் தடையுண்டு கிடந்த
அன்பன் தன் காதல் வெள்ளமும் அன்பியின் தோள் தழுவி
அவ்வெள்ளத்திற்குக் கரைகாண விரும்பும் விதுவிதுப்பும், நெடுநாட்
பிரிவுக்குப் பின் புணரும் புணர்வு என நினைந்து வாயூறும் காட்சியும்,
ஞாயிறு மறையுமுன் என் திங்களைக் காணச்செய்வாய் என்று பாகனை
வேண்டும் பரிவும், இப்பாடல்களில் விளங்கக் காண்போம். பாண்டியன்
பன்னாடுதந்தான் ஒரு பாட்டே படைத்த சங்கப் புலவன். இப்பாட்டில் அவன்
புலமைக் கதிர் ஒளிருகின்றது. குறித்த கார்காலத்துள் வினையை முடித்து வீடு
திரும்பிய காதலன் மழையை நோக்கிப் பொருட்படுத்தாது சொல்லுகின்றான்;
‘கார்மேகமே, மின்னுக, துளிவீசுக, இடி இடிக்க, நன்றாகப் பெய்க, பெய்து
வாழ்க. வினையை வெற்றியொடு முடித்தேன். இப்போது இவள் கூந்தல்
தலையணையில் படுத்துள்ளேன்:’


     தாழிருள் துமிய மின்னித் தண்ணென
     வீழுறை இனிய சிதறி யூழின்
     கடிப்பிகு முரசின் முழங்கி யிடித்திடித்துப்
     பெய்தினி வாழியோ பெருவான்; யாமே
     செய்வினை முடித்த செம்மல் உள்ளமோடு
     இவளின் மேவின மாகிக் குவளைக்
     குறுந்தாள் நாண்மலர் நாறும்
     நறுமென் கூந்தல் மெல்லணை யேமே      (குறுந். 270)