என்று தற்பாராட்டுகின்றான். மழையை விளித்துக் கூறுவது போலத்தான் சொல்லிய காலத்துக்கு முன்னரே மீண்டமையைத் தலைவிக்கு உணர்த்துகின்றான். பின்னொருகால் பிரியும்போது உடனே பிரிவுக்கு இசைவாள் அன்றோ? பிரிந்து வந்து புணரும் ஒரு தலைவன் “உள்ளிய வினைமுடித்தன்ன இனியோள்” (நற். 3) என்று புணர்ச்சியினிமையை வினையினிமையோடு ஒப்பிடுவது எவ்வளவு நடைமுறைப் பொருத்தம். புலவர் பேயனார் ஐங்குறு நூற்று முல்லைத் திணையில் பருவ வரவும் தலைவன் வரவும் பற்றிய துறைகளைப் பலநிலைகளில் வைத்து இலக்கியங் காண்பர். பரத்தையிற் பிரிவு அன்பிற் சிறந்த ஐந்திணைக்கண் பரத்தையிற் பிரிவு வருவது பொருந்துமா? அகத்தலைவன் தன் இன்பியைப் பிரித்து இன்பங்கருதிப் பொருட் பெண்டிர்களை நாடி அலைகின்றான் என்பது இவ்விருவர் தலைமைக்கும் இழுக்காகாதா? இவ்வினாக்கள் தொன்று தொட்டுக் கேட்கப்படுபவை. அறிஞர்கள் காலந்தோறும் விடைகாண முயன்ற முயற்சியை வரலாற்றால் அறிகின்றோம். இன்றும் இம் முயற்சி வளர்ந்து வருகின்றது. உலகில் அகத்திணை என்னும் அன்பிலக்கியத்தைக் கண்ட நம் அறிவு மூதாதையர்களே பரத்தையிற் புணர்ச்சியையும் ஒருகூறாக இயைத்திருத்தலின், வேறென் செய்வது? தகும் என்று அமைதி கூறவே நம் மனம் விழைகின்றது. இந்நூற்றாண்டுப் பெரும்புலவர் டாக்டர் உ.வே.சா. அவர்கள் தம் குறுந்தொகைப் பதிப்பின் அரிய நூலாராய்ச்சியில், “இப் பரத்தையிற் பிரிவு உலகியலையே கருதி அமைந்தது போலும்” என ஒருவகைத் தெளிவுசெய்வர். இது பற்றிய என் கருத்தைப் பின்னர் உரைப்பன். 966 கற்பியற் பாக்களில் 279 பரத்தையிற் பிரிவுக்கு உரியனவாயிருத்தலின், இப்பிரிவு விரிந்தநிலையில் ஆராயவேண்டுவது எனவும், இத் திணைக்கண் இதன் பொருத்தம் கண்டு தெளிய வேண்டுவது எனவும் போதரும். இன்பம் கருதிய இப் பிரிவுத்துறைகள் ஊடல் பொருளான மருதத் திணைப்பாற் படும். இவை குறிஞ்சித்திணையாகவோ பாலைத்திணையாகவோ வகுக்கப்படுதல் இல்லை. பரத்தையிடம் சென்று வந்த கணவனுக்கு வீட்டினுள் நுழைய இசைவு கொடுத்தல் (வாயில் நேர்தல்), இசைவு கொடாமை (வாயில் மறுத்தல்) என்ற இரண்டு துறைகளும் மருதத்திணையில் பெருவரவின. இத்துறைகள் காட்டும் குறிப்பு என்ன? பரத்தை வழிப்பட்ட பின்பு, ஒரு தலைவன் தன் வீட்டிற்குள் புக அஞ்சுகின்றான். புகும் உரிமையை இழக்கின்றான், கேட்டுப் புகவேண்டிய நிலைக்குத் தாழ்கின்றான் என்பது. |