பக்கம் எண் :

அகத்திணைப் பாகுபாடு87

     நன்னலம் தொலைய நலமிகச் சாஅய்
     இன்னுயிர் கழியினும் உரையல்; அவர்நமக்கு
     அன்னையும் அத்தனும் அல்லரோ தோழி
     புலவியஃ தெவனோ அன்பிலங் கடையே    (குறுந். 93)


     அவர் நம்மிடம் இன்பம் துய்க்கும் காதலரா? இல்லையே; நம்மைக்
காக்கும் தாயும் தந்தையும் அல்லவா? அதனால் அவரிடத்து ஊடல் எனக்கு
எப்படித் தோன்றும்? என்று முறைமாற்றம் காட்டி ஒரு தலைவி வாயில்
வேண்டி வந்த தலைவனை வீடு நுழைய மறுக்கின்றாள். மானமுடைய
தலைவன் திருந்துதற்கு இவ்வாயில் நிறுத்தம் போதாதா? ஓரம்போகியாரும்
இளநாகனாரும் மருதத்துறைகளை வகை படப் பாடிய மருதப் புலவர்கள்.
பரணரும் இத்திணையில் பல பாடல்கள் ஆக்கியுள்ளாரேனும், அவை
இலக்கியத்தினும் வரலாற்றுக்குறிப்பு மிக்கவாக உள.1 மருதம் பாடிய
இளங்கடுங்கோவின் பாடல் மூன்றும் (அகம். 69, 171, நற்.50) வாயில் மறுத்தல்
என்னும் ஒரு துறைப்பட்டன. ஒரு துறை கன்றிய புலவர்களை, மடல் பாடிய
மாதங்கீரனார், வெறியபாடிய காமக்கண்ணியார் என அத்துறைப் பெயரால்
பாராட்டுதல் வழக்கு. இதன்படி, இளங்கடுங்கோ ‘வாயில் மறுப்புப் பாடிய’
என்று சிறப்புப்பெயர் பெற்றிருத்தலே சாலும். ஆனால், பாலைபாடிய
பெருங்கடுங்கோ என்பதுபோல ‘மருதம் பாடிய’ எனத் திணைப் பாராட்டு
சுட்டப்படுதலின், இளங்கடுங்கோ மருதத் திணையில் பலதுறைகளைப்
பாடியவர் என்று கருத இடனுண்டு. அவர் யாத்த வேறு துறைச் செய்யுட்கள்
எங்கே? என்பார்க்கு, இறந்தொழிந்தன போலும் என்பதுவே நாம் கூறும்
விடை. இவ்விடை தமிழிலக்கிய வரலாறு கற்பார்க்குப் புரியும்.


     கற்பியலிற் சிறந்த சில துறைகளை இதுகாறும் விளக்கமுறக் கண்டோம்.
திருமணத்துக்குப்பின் தலைவி தலைவனொடு உடன்போதல், பரத்தை கூற்று,
தலைவனது ஆற்றாமை, காமம் மிக்க கழிபடர் கிளவி முதலான பலதுறைகள்
விரிவஞ்சி ஈண்டு விடப்பட்டன.


              
கைக்கிளையும் பெருந்திணையும்

    
கைக்கிளை முதலாப் பெருந்திணை யிறுவாய்
     முற்படக் கிளந்த எழுதிணை என்ப          (தொல். 946)


     எழுதிணையை எண்ணும் வரிசையில், கைக்கிளைக்குத் தொல்காப்பியர்
உரிய முதலிடம் அளித்தாலும், அதன் இலக்கணத்தை ஐந்திணை விரிவுக்குப்
பின்னரே பெருந்திணையோடு அடுத்துச்

 ____________________________________________________
     வேங்கடராசலு ரெட்டியாரின் பரணர். ப. 24