பக்கம் எண் :

அகத்திணைத் தோற்றம்97

     மதனுடைய முழவுத்தோள் ஓச்சித் தண்ணென
     வீசி யோயே வியலிடம் கமழ
     இவணிசை யுடையோர்க் கல்ல தவணது
     உயர்நிலை யுலகத் துறையு ளின்மை
     விளங்கக் கேட்ட மாறுகொல்
     வலம்படு குரிசில்நீ ஈங்கியது செயலே. (புறம். 50)


என்று பெருஞ்சேரல் இரும்பொறையின் இசையைப் பாடுங்கால், தமிழினத்தின்
உலகியல் நெறியைப் புலப்படுத்துதல் காண்க.


     தமிழர் கண்கண்ட உலகத்தை மதித்தனர்; வாழுங் காலத்துப் பெறும்
இன்பத்தை உவந்தனர்; அழிக்க வொண்ணாக் காதல் என்னும் பாலாற்றலும்,
பகைவரைப் பொருது களிக்கும் மறவாற்றலும், அகம் புறம் என்னும்
பாவகைக்கு முறையே பொருள்களாயின எனவும், பழந் தமிழ்ப் புலவர்கள்
இந்நில நோக்கினரே, மக்கள் அறிந்த மெய்யான வாழ்க்கை நிகழ்ச்சிகளைக்
கண்டாங்குப் புனைவதையே விழைந்தனர் எனவும், தமிழ் நெஞ்சம்
காணப்பட்ட இஞ்ஞாலத்தை நல்லதென்று கருதிற்று எனவும், தமிழர்கள்
வரலாற்றின் பேராசிரியர் சீனிவாசனார், தமிழினத்தின் மெய்யியலை
வரையறுத்து மொழிவது நினையத்தகும்.1 தொல்தமிழர் தம் கால வரலாற்றின்
பேராசிரியர் சிவராசனார் தமிழிலக்கியத் தோற்றத்தை மூன்று
காலப்பகுதிகளாக ஆராய்வர்; இயற்கைக் காலம் என்று சங்ககாலத்துக்குப்
பெயரிடுவர்; அக்காலப்பாட்டுக்களில் இவ்வுலக நல்வாழ்வுக்கு
வேண்டுகைகளும் உலகவின் பங்களுமே பெரிதும் பாடப்பட்டுள என்று
தெளிவிப்பர்.2 இச்சான்றுகளால் இவ்வுலகத்தையும் ஈண்டுச் செய்யும்
வினைகளையுமே முதன்மையாக மதித்த தமிழனத்தின் கோட்பாடு விளங்கும்.

அகத்திணையின் உரிப்பொருள்


     நம் பிறப்போடு ஒட்டியது, உலகப் பிறப்பை அருளுவது” யாண்டும்
பரந்தது, உணர்ச்சியுள் வலியது3, ஐம்புல வின்பமும் ஒருங்கு தருவது4,
எண்ணம்
சொல் செயலெல்லாம் இனிப்பது எது? காதல், காதல், காதல். இக்
காதலே, இயல்பான பாலுணர்ச்சியே அகத்திணை யிலக்கியத்தின்
பாடற்பொருளாம். உலகியலில் வாழ்வியலைக் கண்ட தமிழினத்தின்
தனியிலக்கியத்துக்கு வேறு எவ்வுணர்ச்சி பாடுபொருளாக இருக்க முடியும்?
இவ்வுணர்ச்சிக்குத்

 ____________________________________________________
     P.T.S. History of the Tamils, p. 154

     K.N.S. The Chronology of the Early Tamils, p.8.
     கா.சு.பிள்ளை; பழந்தமிழர் நாகரிகம், ப.4.
     குறுந்.70. ஒ.நோ. குறள்- 1101.