பக்கம் எண் :

96தமிழ்க்காதல்

     இம்மை யுலகத் திசையொடும் விளங்கி
     மறுமை யுலகமும் மறுவின் றெய்துப
     செறுநரும் விழையும் செயிர்தீர் காட்சிச்
     சிறுவர்ப் பயந்த செம்ம லோரெனப்
     பல்லோர் கூறிய பழமொழி யெல்லாம்
     வாயே யாகுதல் வாய்ந்தனம் தோழி   (அகம். 66)


என்று உளம் பூரித்துத் தோழிக்கு உரைத்தாள். குடும்பவொற்றுமைக்குக்
குழந்தைப்பேறு வேண்டும் எனவும், இப்பேற்றால் மறுமைப்பேறும் கிட்டும்
எனவும் நம்முன்னோர் நம்பிய எளியநெறி பெறப்படும்.


     சேரமான் பெருஞ்சேரல் இரும்பொறை வெற்றிதந்த முரசைக்
குளிப்பாட்டும் பொருட்டு வெளியே எடுத்துச் சென்றிருந்தான். முரசு வைக்கும்
கட்டில் தனியே கிடந்தது. அவ்வமயம் வந்த புலவர் மோசிகீரனார்
நடையயர்ச்சியால் வீரக்கட்டிலைப் படுக்கைக் கட்டில் என மயங்கி,
அதன்மேல் ஏறித் துயின்றார். முரசுவிழாக் கொண்டாடித் திரும்பிய அரசன்
முரசு தூங்கவேண்டிய இடத்து மோசி தூங்கக் கண்டான். மறம் வாழும் தூய
இடத்து மடிவாழக் கண்டான்; அதுவும் வெற்றிவிழாக் கொண்டாடி வரும்போது
கண்டான்; பலர் முன்னிலையில் கைவாளோடு கண்டான் என்றால்,
மோசிகீரனார் வெட்டுண்பார், செத்தொழிவார் என்றன்றோ நாம்
எதிர்பார்ப்போம். நடந்தது வேறு. முரசைத் தரையிற் கிடத்திக் கைவாளைத்
தூர எறிந்து வெண்சாமரங் கொண்டு தன் கையாலே மெல்ல வீசிப் புலவர்

தூக்கத்தை மேலும் வளர்த்தான். நெடிது உறங்கி விழித்த புலவர் வாள் வீச
வேண்டிய வேந்தன் விசிறி வீசுவதைப் பார்த்துத் தன் புலமையெல்லாம்
கொட்டிப் பாராட்டினார். அவ்வுலகம் யார்க்குக் கிடைக்கும்? இவ்வுலகத்துப்
புகழ் உடையோர்க்குத்தான் கிடைக்கும். அப்புகழ் எப்படி வரும்? இதுபோன்ற
அரிய நல்ல தொண்டு செய்தாற்றான் வரும். என்னைக் கொன்றாலும்
உனக்குப் பழியில்லை; அது செய்யாது, என் புலமையைப் போற்றிப்
புகழ்கொண்டாய். நீ இங்ஙனம் செய்வதற்குக் காரணம் என்ன? இவ்வுலகத்து
நல்ல பணிசெய்து இம்மைப் புகழ் கொண்டோர்க்கல்லது, மறுமையுலகத்து
இருப்பு இல்லை என்று விளங்கிக்கொண்ட நெறித் தெளிவுதான்.1

 ___________________________________________________
     ஒ.நோ

     புலவர் பாடும் புகழுடையோர் விசும்பின்
     வலவன் ஏவா வான வூர்தி
     எய்துப என்பதஞ் செய்வினை முடித்தெனக்
     கேட்பல் எந்தை சேட்சென்னி நலங்கிள்ளி (புறம். 27)