பக்கம் எண் :

புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் 10

புதிய வடிவத்திலும் உருக்கொடுக்க முயன்று வெற்றியும் கண்டார். அதுதான் ‘காட்சிகள்’
என்ற வசன கவிதைத் தொகுப்பு.
 
     பாரதி தன் எண்ணங்களை எழுத்து ஆக உருவாக்குவதற்குப் பல சோதனைகளில்
ஆர்வம் கொண்டிருந்தார் என்பது அவரது படைப்புகளை ஆராய்வோருக்குப் புரியும்.
கவிதைகளில் பல சோதனைகள் செய்தது போலவே, வசனத்தில் தராசு, ஞானரதம்,
நவதந்திரக் கதைகள் போன்ற புதிய முயற்சிகளை அவர் செய்திருக்கிறார். அதே
தன்மையில், வசனத்தை மீறிய, ஆயினும் கவிதையின் பூரணத்துவத்தை எய்தாத ஒரு
முயற்சியாக அவர் படைத்துள்ள வசன கவிதைகளே ‘காட்சிகள்’. எனவே, கவி
சுப்பிரமணிய பாரதிதான் தமிழ்ப் ‘புதுக்கவிதை’யின் தந்தையாவார்.
 
     பாரதியின் ‘காட்சிகள்’ வசனம்தான்; அவரது படைப்புகளைத் தொகுத்துப்
பிரசுரித்தவர்கள் தவறுதலாக அவற்றையும் கவிதைகளோடு இணைத்து, வசன கவிதை
என்று வெளியிட்டுவிட்டார்கள் என்று அந்தக் காலத்தில் ஒரு சிலர் எதிர்க்குரல்
கொடுத்தது உண்டு.
 
     பாரதி ‘காட்சிகள்’ என்ற தலைப்பில் எழுதியிருப்பது வெறும் வசனம் அல்ல.
தவறுதலாகக் கவிதைத் தொகுதியில் இடம் பெற்றுவிட்ட வசன அடுக்குகள் என்று அதைக்
கொள்வதும் சரியாகாது. என்றோ எழுதப்பட வேண்டிய கவிதைச் சித்திரங்களுக்காக
அவ்வப்போது குறித்து வைக்கப்பட்ட துணுக்குகள் என்று மதிப்பிடுவதும் பொருந்தாது.
பாரதியின் கட்டுரைகள் என்ற பெயரில் துண்டு துணுக்குகள், எண்ணச் சிதறல்கள் பற்பல
காணப்பட்ட போதிலும், ‘காட்சிகள்’ முழுமைபெற்ற-நன்கு வளர்க்கப்பட்ட-சிந்தனைக்
கட்டுமானங்களாகவும், சொல் பின்னல்களாகவுமே அமைந்துள்ளன.
 
     தனது எண்ணங்களுக்கும், அனுபவங்களுக்கும், உணர்ச்சிகளுக்கும் வெவ்வேறு
விதமான வடிவங்கள் கொடுக்க ஆசைப்பட்ட பாரதிக்குக் கவிதை ‘தொழில்’; இதயஒலி;
உயிர் மூச்சு. என்றாலும், கவிதை சில சமயங்களில் சக்தியை இழந்து விடுகிறது. வசனம்
அநேக சமயங்களில் கவிதையை விட அதிகமான வலிமையும் அழகும் வேகமும் பெற்று
விடுகிறது. இதை பாரதியே உணர்ந்திருக்கிறார். இதற்கு ‘பாஞ்சாலி சபதம்’
நெடுங்கவிதையில் வருகிற ‘மாலை வருணனை’ எனும் கவிதைகளும், பாரதி எழுதியுள்ள
‘ஸூர்யாஸ்தமனம்’ என்ற வசனப் பகுதியும் நல்ல எடுத்துக்காட்டு ஆகும். ஆகவே அவர்
‘வசன கவிதை’ என்ற புதிய சோதனையை மேற்கொண்டார்.
 
     மேலும் பாரதி ‘வடிவம்’ (Form) பற்றி தெளிவாக சிந்திக்கிறார் என்று கொள்ள
வேண்டும். ‘வசனகவிதை’யில் வருவது இது-
 
  “என் முன்னே பஞ்சுத் தலையணை கிடக்கிறது.
அதற்கு ஒரு வடிவம், ஓரளவு ஒரு நியமம்
ஏற்பட்டிருக்கின்றது

இந்த நியமத்தை, அறியாதபடி சக்தி
பின்னே நின்று காத்துக் கொண்டிருக்கிறாள்.
மனிதஜாதி இருக்குமளவும் இதே தலையணை