| புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் 128 |
குறை கூறல் | க.நா. சுப்ரமண்யம் 1964ல் ‘இலக்கிய வட்டம்’ என்ற மாதம் இருமுறைப் பத்திரிகையை வெளியிட்டுக் கொண்டிருந்தார். அதன் 17வது இதழ் ‘தமிழ் இலக்கியத்தில் சாதனை’ யை அளவிடும் விசேஷ மலராகத் தயாராயிற்று. 1947-64 கால கட்டத்தில் தமிழில் நிகழ்ந்த இலக்கிய சாதனைகள் குறித்து, தி. ஜானகிராமன், எம்.வி. வெங்கட்ராம், தி.க.சிவசங்கரன், ரதுலன், வெ.சாமிநாதன். ஆர். சூடாமணி, தெ.பொ.மீனாட்சிசுந்தரம், நகுலன், வல்லிக்கண்ணன் ஆகியோர் அவரவர் நோக்கத்தில் அபிப்பிராயங்கள் அறிவித்து கட்டுரைகள் எழுதியிருந்தார்கள். தி.க. சிவசங்கரன் ‘பதினேழு ஆண்டில் இலக்கியம்’ என்ற தலைப்பில், சிறுகதை, நாவல், கவிதை, புதுக்கவிதை, கட்டுரை, இலக்கிய விமர்சனம், நாடகம் என்று பகுத்து, விரிவாகத் தனது கருத்துக்களை அறிவித்திருந்தார். அதில் புதுக்கவிதை பற்றி அவர் கூறியது இங்கு எடுத்துச் சொல்லப்படவேண்டிய கருத்து ஆகும்-- “புதுக்கவிதை குறித்து என் கருத்து யாது?” புதுமை, சோதனை என்ற முறையில் நான் புதுக்கவிதையை வரவேற்கிறேன்; திறந்த மனத்தோடு புதுக் கவிஞர்களின் படைப்புகளைச் சுவைக்கிறேன். புதுமைப்பித்தன், கு.ப. ராஜகோபாலன், பிச்சமூர்த்தி, வல்லிக்கண்ணன், கே.ராமநாதன் ஆகியோரின் புதுக்கவிதைகளை ‘கலா மோகினி’, ‘கிராம ஊழியன்,’ ‘சிவாஜி’, ‘நவ சக்தி’ ஆகிய இதழ்களில் அவை வெளிவந்த காலம் தொட்டு வாசித்து வருபவன் நான். அண்மையில் ஆறு ஆண்டுகளாக ‘எழுத்து’ இதழ்களிலும், பின்னர் ‘இலக்கிய வட்ட’த்திலும் இடைவிடாது படித்து வருகிறேன். ‘எழுத்து’ ஏட்டின் தோற்றத்திற்குப் பின்னால், தமிழில் புதுக் கவிதை எண்ணிக்கையில் பெருகியிருக்கிறது. ஆனால் அதன் தரம் பெருகியிருக்கிறதா என்பது சந்தேகம்; விவாதத்திற்குரிய விஷயம். என்னைப் பொறுத்தவரையில் இன்று எழுதப்பெறும் பழைய (மரபுக்) கவிதையைப் போலவே புதுக்கவிதையும் எனக்குச் சலிப்பூட்டுகிறது. புதுக்கவிதையின் புதுப் பாதையை, அதன் சொல்லாட்சியை, படிமச் சிறப்பை, உருவ நயத்தை நான் ரசிக்கிறேன். இப்படியும் கவிதை வரவேண்டியதுதான் என்று உணர்கிறேன். ஆயினும், புதுக்கவிஞர்களின் குரல்களை என்னால் ரசிக்க முடியவில்லை. வெறுமை, விரக்தி முனைப்பு, மனமுறிவு ஆகிய குரல்கள் பல புதுக்கவிதையின் அடிநாதமாக ஒலிக்கின்றன. | | |
|
|