நவீன பட்டினத்தார்களாகவும், பத்திரகிரியார்களாகவும் திருமூலர்களாகவும், திகம்பரச் சித்தர்களாகவும் சில புதுக் கவிஞர்கள் மாயாவாதம் (மிஸ்டிசிசம்) பேசுவது, அதுவும் இந்திய வரலாற்றின் முக்கியமான இக்கால கட்டத்தில் அழுது புலம்பிக் கையறு நிலையில் கை விரல்களைச் சொடுக்குவது, எனக்கு மிகவும் பிடிபடாத சங்கதி. இந்தக் கவிஞர்கள் தமிழ்ச் சொல்லை முறிக்கட்டும் மனித மனத்தை ஏன் சிரமப்பட்டு முறிக்க வேண்டும்? அது தான் தெரியவில்லை. ஐயோ பாவம் இவர்களுக்கு என்ன சுகக்கேடு, நோய்? புதுக் கவிஞர்களின் இந்த மனமுறிவு (மனமுறிப்பு) விவகாரம் பற்றி ‘எழுத்து’ ஆசிரியர் சி.சு. செல்லப்பா, 62வது ஏட்டில் வரைந்திருப்பது இங்கு நன்கு சிந்திக்கத் தக்கது. ‘மாடர்னிட்டியும் நம் இலக்கியமும்’ என்னும் 1964 பிப்ரவரி தலையங்கத்தில் சி.சு.செ. கூறுகிறார்: ‘மனமுறிவு-ஃபிரஸ்டிரேஷன்- ஒரு மோஸ்தர் (ஃபாஷன்) இல்லை. இன்னொரு இலக்கிய நோக்கைப் பார்த்து இமிடேட் செய்வதுக்கு; அந்த இடத்து அந்த நாளைய வாழ்வைப் பொறுத்தது. மேற்கே இன்றைய வாழ்வு அதுக்கு உணவூட்டலாம். நம் வட்டாரத்தில் நம் வாழ்வில் அது தொனித்தால் ஒழிய, இலக்கியத்தில் தொனிக்காது. இமிடேட் செய்து தொனிக்கச் செய்தால், அதில் உண்மை இருக்காது. ந.பிச்சமூர்த்தி இது பற்றி ஒரு சம்பாஷணையில் சொல்லியது. ‘மேற்கே டிஸ்சின்டக்ரேட்டிங்- அதாவது உதிர்கிற நிலை. நம்முடையது; ஷேப்பிங் அதாவது, உருவாகிற நிலை, எனவே மனமுறிவு நம் இலக்கியத்தின் பொதுத் தொனியாக இருக்கமுடியாது.’ ந.பி. வாழ்க்கையையும் இலக்கியத்தையும் பிரித்துப் பார்க்க முற்படாதவர். ஏன், இலக்கியத்தை விட வாழ்க்கையையே மேலானதாகக் கருதபவருங்கூட, ந.பி. சொன்னது ஆணி அடித்த கருத்து... ந.பிச்சமூர்த்தியின் ஆணி அடித்த கருத்தை, அதை அடியொற்றிக் குரல் எழுப்பும் செல்லப்பாவின் கருத்தை, ஏனைய புதுக்கவிஞர்கள்-மாயாவாத மனமுறிவுக் குரல் கொடுக்கும் புதுக்கவிதைத் தம்பிரான்கள்-ஏற்றுக் கொள்வார்களா, அல்லது மனமுறிவு (மனமுறிப்பு)த் தத்துவம் தான் இன்றைய புதுக்கவிதையின் பொதுக்குரலாக விளங்குமா என்பது பொறுத்துப் பார்க்க வேண்டிய விஷயம். நான் உணர்ந்த வரையில், மிகைபடக் கூறல், கூறியது கூறல், மயங்க வைத்தல் ஆகிய சீக்குகள் புதுக் கவிஞர்களிடமும் மலிந்து காணப்படுகின்றன. இந்நோய் விரைவில் அகலக் காலதேவன் அருள் புரிவானாக! |