பக்கம் எண் :

புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் 130

க.நா. சு. கருத்து

    
     1963 இறுதியில் தோன்றியது க.நா. சுப்ரமண்யத்தின் ‘இலக்கிய வட்டம்’; மாதம்
இருமுறை. அதன் இதழ்களில் புதுக் கவிதை போதிய இடம் பெற்று வந்தது.

     ‘இலக்கியத் துறையில் செய்ய வேண்டிய காரியங்கள் எத்தனையோ இருக்கின்றன--
இன்றைய தமிழ் இலக்கிய வளம் பெருக’ என்ற நோக்குடன் ஆரம்பிக்கப்பட்ட ‘இலக்கிய
வட்டம்’ பத்திரிகையில், ‘நமக்கு நாமே பல விஷயங்களையும் தெளிவு செய்து கொள்ள
வேண்டும்’ என்ற எண்ணத்துடன் அதன் ஆசிரியரும் மற்றும் சில எழுத்தாளர்களும்
எழுதிக் கொண்டிருந்தார்கள். அதனால், ‘இலக்கியவட்டம்’ நல்ல இலக்கியப் பத்திரிகையாக
விளங்கியது. எழுத்தாளர்களுக்கும் இலக்கியப் பிரியர்களுக்கும் பயன்படக் கூடிய
அருமையான விஷயங்கள் ஒவ்வொரு இதழிலும் பிரசுரமாயின.
‘இ.வ.’ சுவாரஸ்யமான ஒரு இலக்கிய ஏடு ஆகவும் வளர்ந்து வந்தது.

     அது ஒரு வருஷமும் சில மாதங்களும்தான் உயிரோடிருந்தது என்று நினைக்கிறேன்.

     ‘இலக்கிய வட்டம்’ புதுக்கவிதையையும் ஒரு சோதனைத்துறை’ ஆகத்தான் கருதியது.
பிச்சமூர்த்தியின் படைப்புகளை ‘புதுக்கவிதை’ யாக அது அங்கீகரிக்கவில்லை.

     அதன் 25வது இதழில் வெளிவந்த அபிப்பிராயம் இது-
 

புதுக்கவிதை


     ‘ஏனய்யா இந்தமாதிரிக் கவிதையல்லாத கவிதைகளையெல்லாம் போட்டு எங்கள்
பிராணனை வாங்குகிறீர்?’ என்று ஒரு நண்பர் புதுக்கவிதை முயற்சிகளைக் குறித்து எழுதிக்
கேட்டுள்ளார்.

     மணிக்கொடி காலத்தில் சொ.வி. புதுமைப்பித்தன் என்ற பெயரில் சிறுகதைகள்
எழுதத் தொடங்கிய காலத்தில் இதெல்லாம் கதைகளா ஐயா, கழுத்தறுப்பு என்று
சொன்னவர்கள் உண்டு.

     அவர்களே இப்போது புதுமைப்பித்தன் என்றால் ஆஹா என்கிறார்கள்.

     இந்தப் பாராட்டுக்கும் கண்டனத்துக்கும் அர்த்தமேயில்லை. சிறுகதை என்கிற உருவம்
போல, புதுக்கவிதை என்கிற உருவம் தோன்றிவிட்டது-நிலைக்க அதிக நாள் பிடிக்காது.

     தமிழில் செய்யுள் எழுதுவது மிகவும் சுலபமான காரியமாகி, எழுதப்பட்ட செய்யுள்
எல்லாம் கவிதை என்று சொல்கிற அளவுக்கு வந்தாகிவிட்டது.