பக்கம் எண் :

131  வல்லிக்கண்ணன்

     இது எல்லா மொழி இலக்கியங்களுக்குமே பொதுவாக உள்ள விஷயம் தான். மரபு
என்பதை மீறியே மரபுக்குப் புது அம்சங்களைச் சேர்க்க வேண்டியது அவசியமாகிறது.

     இந்த அர்த்தத்தின் புரட்சியும் எல்லா மரபுகளிலுமே உள்ள ஒரு அம்சம்தான்.

     கவிதை வழிகள் தடம் தேய்ந்து தென்றல் காயவும், மதி தகிக்கவும். மலர் துர்க்கந்தம்
வீசவும் (காதலால் அல்ல) தொடங்கிவிட்டது என்பதைத் தற்காலக் கவிதையைப்
படிப்பவர்களில் சிலராவது ஏற்றக்கொள்வார்கள்.

     இந்தக் கவிதை மொழி, வார்த்தைகள், பொருள்கள், மதி, மலர், தென்றல், ஒளி
இத்யாதி எல்லாம் உபயோகத்தால் தேய்ந்து தேய்ந்து உருக்குலைந்து விட்டன.

     பழைய சந்தங்கள் போக, புதுச்சந்தங்கள், புது வார்த்தைச் சேர்க்கைகள், புது
உவமைகள் இன்று உள்ள நிலைமைக் கேற்பத் தோன்றியாக வேண்டும்.

     லக்ஷியத் தச்சன் தேடிக் கைப்பிரம்பு இழைப்பதும், உருப்படாத வழியில் பானை
வனையும் குயவனின் பாண்டம் உருக்குலைவதும், உருக்குலைந்த சிறகொடிந்த-வலிகுன்றிய
சிந்தனைகள். இவை இன்று கவிதையே யாக மாட்டா.

     புதுக்கவிதை புது வாழ்வின் எதிரொலியாம். வாழ்க்கையின் இன்றையச் சிக்கலை
சிக்கலாகக் காட்டும் சிந்தனை வெளியாம். சிக்கலைச் சுலபமாக்கி சுகம் தேடும்
மனப்பிராந்தி அன்று.

     புதுக்கவிதை சங்க காலத்துப் பேச்சுச் சந்தத்தை அஸ்திவாரமாக்கிக் கொண்டு எழுதக்
கூடாது என்பதில்லை.

     ‘யாதும் ஊரே, யாவரும் கேளிர்’ என்கிற சந்தம் எல்லா காலத்துக்கும் பொதுவானதுதான்.

     புதுக்கவிதை ஏமாற்றத்தை, ஏக்கத்தைத்தான் எதிரொலிக்க வேண்டுமென்கிற
கட்டாயமில்லை.

மேலை நாடுகளில் அப்படியென்றால், ஆனைக்கு அர்ரம் என்பதில்லை.

     புதுக்கவிதை, சிறுகதை, நாடகம், நாவல் போல, விமர்சனம் போல,
இலக்கியத்தில்-தமிழ் இலக்கியத்தில் ஒரு புதுத் துறை.

     அது இன்னும் கவிதையாகி விடவில்லை.

     புதுக்கவிதை எழுதுகிற பத்திருபதுபேர் தொடர்ந்து எழுதி வந்தால் புதுக்கவிதை
கவிதையாகிற பக்குவம் பெறலாம்.

     அது வரை அது ஒரு சோதனைத் துறை.
                                   (‘இலக்கிய வட்டம்’ 23-10-64)

     சோதனை ரீதியில் கவிதை படைத்து வந்த அமெரிக்க, ஐரோப்பியக் கவிஞர்கள்
பலரது கவிதைகளின் மொழி பெயர்ப்பு ‘இலக்கிய வட்டம்’ இதழ்களில் பிரசுரமாயின.