பக்கம் எண் :

3  வல்லிக்கண்ணன்

முதற்பதிப்பு முன்னுரை

 
     ‘புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்’ வரலாற்று நோக்கில் எழுதப்பட்ட
கட்டுரைகளே ஆகும்.
 
     தீபம்’ இலக்கிய ஏட்டில் ‘சரஸ்வதி காலம்’ பற்றிய கட்டுரைத் தொடர் எழுதி
முடித்திருந்த சமயம், அடுத்து இலக்கியக் கட்டுரைத் தொடர் ஒன்றை நான் எழுதவேண்டும்
என்று நண்பர் நா. பார்த்தசாரதி கேட்டுக்கொண்டார்.
 
     அதே சந்தர்ப்பத்தில் எனக்குக் கடிதம் எழுதிய இலங்கை எழுத்தாளர் கலாநிதி க.
கைலாசபதி இவ்வாறு கேட்டிருந்தார். ‘புதுக்கவிதை பற்றி ஏதேதோ விவாதங்கள்
நடைபெறுகின்றனவே. அதன் ஹிஸ்டரி உங்களுக்கு நன்றாகத் தெரியுமே, நீங்கள் ஏன்
புதுக்கவிதையின் வரலாற்றை எழுதக்கூடாது?”
 
     கவிஞர் மீரா (சிவகங்கை மன்னர் கல்லூரித் தமிழ்ப் பேராசிரியர்) ‘புதுக்கவிதையின்
தோற்றமும் வளர்ச்சியும்’ என்ற தலைப்பில் நான் கட்டுரைகள் எழுதவேண்டும் என்று
விருப்பம் தெரிவித்து வந்தார்.
 
     இதனால் எல்லாம், புதுக்கவிதையின் வரலாற்றை ‘தீபம்’ இதழ்களில் தொடர்ந்து
எழுதலானேன். 1972 நவம்பர் முதல் 1975 மே முடிய இக்கட்டுரைத் தொடர் வெளிவந்தது.
 
     புதுக்கவிதை, ஆரம்பகாலம் முதலே பலத்த எதிர்ப்பு, பரிகசிப்பு, கண்டனம், கேலி,
குறைகூறல் ஆகியவற்றுக்கு இடையிலே தான் வளர வேண்டியிருந்தது. அக்காலத்திய
இலக்கிய ஏடுகளில் விவாதங்களும் நிகழ்ந்துள்ளன. அந்நாளையப் பத்திரிகைகள் இன்றைய
ரசிகர்களுக்கும் இனி வரவிருக்கும் இலக்கியப் பிரியர்களுக்கும் கிடைக்கக் கூடியன அல்ல.
ஆகவே, விவாதக் கட்டுரைகளை இவ்வரலாற்றில் நான் விரிவாகவே எடுத்து
எழுதியிருக்கிறேன்.
 
     அதே போல, முக்கியமான கவிதைகளைக் குறிப்பிடுகையில் ரசிகர்களுக்குப்
பயன்படும் விதத்தில் அக்கவிதைகளை முழுசாகவே தந்திருக்கிறேன்.
 
     இம்முறை ரசிகர்களுக்கும் இலக்கிய மாணவர்களுக்கும் ஆராய்ச்சியில்
ஈடுபட்டுள்ளோர்க்கும் மிகவும் உதவியாக இருப்பதை நான் பின்னர் பலர் கூறக்கேட்டு
அறிந்து மகிழ்வுற்றேன்.
 
     இது புதுக்கவிதை வரலாறு தான், புதுக்கவிதைகள், கவிஞர்கள் பற்றிய விமர்சனமோ
ஆய்வுரையோ அல்ல. புதுக்கவிதையின்