தோற்றமும் வளர்ச்சியும் வருஷ ரீதியில் தொகுத்து எழுதப்பட்டுள்ளன இதில், போகிறபோக்கில் அங்கங்கே சிற்சில இடங்களில் எனது அபிப்ராயங்களையும் மேலோட்டமாகக் குறிப்பிட்டுருக்கிறேன். |
பாரதிக்குப் பிறகு தனி மலர்ச்சி காட்டிய ‘வசன கவிதை’ சில பேர்களது முயற்சியோடு குன்றி, 1940களுக்குப் பிறகு ஒரு தேக்கநிலையை எய்தியிருந்தது. பல வருஷங்களுக்குப்பிறகு ‘எழுத்து’ இலக்கிய ஏடு தோன்றியதும், புதுக்கவிதை புத்துயிர்ப்பும் புதுவேகமும் பெற்று ஓங்கி வளர்ந்தது. எனவே புதுக்கவிதை வரலாற்றில் ‘எழுத்து’க்கு பெரும் பங்கும் முக்கிய இடமும் உண்டு. அதனால்தான் இக்கட்டுரைகளில் ‘எழுத்து’ கால சாதனைகளுக்கு நான் அதிகமான கவனிப்பு கொடுக்க நேர்ந்தது. |
‘தீபம்’ பத்திரிகையில் இக்கட்டுரைகள் பிரசுரமாகிக் கொண்டிருந்த போதும், அதன் பின்னரும், பல இடங்களிலிருந்தும்-முக்கியமாகக் கல்லூரிகளிலிருந்து-பாராட்டுக்கள் கிடைத்து வந்தன. இவ்வரலாறு புத்தகமாக வரவேண்டும்; இலக்கிய மாணவர்களுக்கும் ஆராய்ச்சி செய்கிறவர்களுக்கும் பயனளிக்கும் என்ற கருத்தும் தொடர்ந்து கூறப்பட்டு வந்தது. |
இப்போது புதுக்கவிதை வரலாறு ‘எழுத்து பிரசுரம்’ ஆக வெளிவருகிறது. உறுதியோடும் ஊக்கத்தோடும். அயராத தன்னம்பிக்கையோடும் நல்ல முறையில் நல்ல புத்தகங்களைத் தயாரித்து வருகிற நண்பர் செல்லப்பா இவ்வரலாற்றையும் பிரசுரிப்பது எனக்கு மகிழ்ச்சியும் பெருமையும் தருகிறது. அவருக்கு என் நன்றி உரியது. |
என்போக்கில் இவ்வரலாற்றை எழுத எனக்கு ஊக்கம் தந்து முப்பது இதழ்களில் வெளியிட்டு உதவிய ‘தீபம்’ நா.பா. அவர்களுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இது புதுக்கவிதையின் வரலாறு மட்டுமே இதை அடிப்படையாக வைத்துக் கொண்டு புதுக்கவிதைகளையும் கவிஞர்களையும் நன்கு விமர்சிக்கும்-ஆழமும் கனமும் கொண்ட-ஆய்வுரைகள் இனி வரவேண்டும். வரும் என நம்பிக்கையோடு எதிர்பார்க்கிறேன். |
|
ராஜவல்லிபுரம் மார்ச், 1977 | | வல்லிக்கண்ணன் |