பக்கம் எண் :

31  வல்லிக்கண்ணன்

சுருதி வேறு. வாய் விட்டோ விடாமலோ இதைப் படித்தாலும், நாம் வசன உலகில் காலால்
நடக்கவில்லை என்றும் கவிதை உலகில் இறகு கட்டிக் கொண்டு பறக்கிறோம் என்றும்
உணர்ச்சி சொல்லும். வசனத்திற்கும் கவிதைக்கும் மற்றொரு பெரிய வித்தியாசம் உண்டு.
‘வியஷ்டி’ என்கிறார்களே, அந்தப் பன்மையையே வசனம் வற்புறுத்தும். கவிதை
ஒருமையை வற்புறுத்தும். உடலுக்கு எலும்புக்கூடு எப்படியோ அதைப் போலவே, இந்த
ஒருமை என்னும் குணம் கவிதையின் அஸ்திவாரமும் அழகும் ஆகும். சிருஷ்டியின்
பன்மையை ஒருமையாக்காத கவிதையில் பெருஞ்சிறப்பு இருக்க முடியாது.
 
  ‘இஃது சக்தியின் லீலை.
அவள் உள்ளத்திலே பாடுகிறாள்.
அது குழலின் தொளையிலே கேட்கிறது.
தொம்பைப் பிள்ளைகள் பிச்சைக்குக் கத்துகின்றன. பிடாரன்
குழலையும் தொம்பைக் குழந்தைகளின் குரலையும் யார் சுருதி
சேர்த்து விட்டது? சக்தி.
ஜரிகை வேணும் ஜரிகை என்றொருவன்
கத்திக்கொண்டு போகிறான்.
அதே சுருதியில்.
ஆ! பொருள் கண்டு கொண்டேன்.
பிடாரன் உயிரிலும் தொம்பக் குழந்தைகளின் உயிரிலும்
ஜரிகைகாரன் உயிரிலும் ஒரே சக்தி லீலையாடுகின்றது.
அவள் தேன். சித்த வண்டு அவளை விரும்புகின்றது.
வடமேருவிலே, பலவாகத் தொடர்ந்து வருவாள்.
வானடியைச் சூழ நகைத்துத் திரிவாள்.
அவளுடைய நகைப்புகள் வாழ்க.
தெற்கே நமக்கு ஒருத்தியாக வருகின்றாள்: அன்பு மிகுதியால்,
ஒன்று பலவினும் இனிதன்றோ?
வைகறை நன்று; அதனை வாழ்த்துகின்றோம்,
 
     ஒன்று பலவினும் இனியதன்றோ என்கிறார் கவி. ஆமாம் அதனால்தான் கவிதைக்கு
மதிப்பு.

கவிதையின் முக்கிய லட்சணம் இந்த ஒருமையில் இருப்பதினால் தான்,
யாப்பலங்காரங்களில் பல உண்டாகியிருக்கின்றன. ஒரு புலனால் உணர்ப்படுவதை மற்றொரு
புலனால் அறிவதுபோல் காட்டும் பொழுது ஒரு புதுமையும் கவர்ச்சியும் தோன்றும்.
 
  செந்தமிழ் நாடென்னும் போதினிலே
இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே,
 
     தேன் காதில் பாய்ந்து இன்பத்தைத் தருவதென்றால் அது கவிதை உலகில்தான்
நடக்கும், இரவியின் ஒளியிடைக் குளிப்பதும், ஒளி இன்னமுதினை உண்டு களிப்பதும்
வசனத்திற்குப் பொருந்துமா?

     “பாரதியின் ‘காட்சி’ கவிதையின் மாற்றுக்கு எந்த விதத்திலும் குறையாதது. தமிழ்
நாட்டு வசன கவிதையில் அதுதான் முதல் முயற்சி”.

(கலாமோகினி, இதழ் 9)