பக்கம் எண் :

35  வல்லிக்கண்ணன்

போடுகிறது. ‘வீ ஸீ ஹெவன் இன்தி ஒயில்ட் ஃபிளவர் அண்ட் எட்டர்னிட்டி இன் எ
கிரைன் ஆப் ஸாண்ட்’ என்ற சித்த வாக்கை அனுபவிக்க நாம் ஐரோப்பிய சங்கீதத்தைக்
கற்க வேண்டியதில்லை.

     ‘புல்லினில் வைரப்படை தோற்றுங்கால்’ என்பதை அனுபவிக்க காம்போதி ராகமா
வேண்டும்?
 
  ‘நமது விழிகளிலே மின்னல் பிறந்திடுக!
நமது பாட்டு மின்னலுடைத்தாகுக!’
 
என்ற மகாவாக்கு கவிதையாக எந்த சங்கீதத்தின் உதவி வேண்டும், கேட்கிறேன்.

(கலாமோகினி-13)


      இலக்கணத்துக்கு ஏற்ப இனிய கவிதைகள் படைப்பதில் தன் ஆற்றலை ஈடுபடுத்தி
வெற்றிகள் கண்டவர் கவிஞர் கலைவாணன். (திருவானைக்காவல் க. அப்புலிங்கம்)
ஆயினும் அவர் வசன கவிதைகளை வெறுக்கவில்லை. இப்புது முயற்சி பற்றிய தன்
கருத்துக்களை அவர் ‘கலாமோகினி’யில் கட்டுரையாக்கினார். அதுவும் அறிந்து
கொள்ளப்பட வேண்டிய ஒன்றே:

     “தமிழில் இலக்கிய அமைப்பு. வசனம் அதாவது உரைநடை; கவிதை அல்லது
செய்யுள் நடை என இரண்டே பிரிவாகத்தான் இதுவரை இருந்து வந்திருக்கிறது.
இப்பொழுது சிலர் இவைகள் இரண்டிலுமுள்ள சிற்சில அம்சங்களைக் கூட்டி ஒரு
அவியலாகச் செய்து அதனை ‘வசன கவிதை’ என்று சொல்லுகிறார்கள். இவ்வழி தமிழ்
பாஷைக்கே புதுமையானது- புரட்சிகரமானதுங்கூட.

     வால்ட் விட்மன்னும், எட்வர்ட் கார்ப்பென்டரும் ஆங்கிலத்தில் ‘வசன கவிதை’
புனைந்திருக்கலாம். நான்கு வேதங்களும் வடமொழியில் வசன ரூபத்தில் இருக்கலாம்.
கவினொழுகும் காதம்பரி சமஸ்கிருத வசன காவியமாக இருக்கலாம். தாகூர் வங்காளியில்
வசன கவிதை எழுதிக் குவித்துமிருக்கலாம். ஆனால் தமிழுக்கு வசன கவிதை புதிது
என்பது மட்டும் நிச்சயம். பல்லாயிர வருஷங்களாக பனம்பாரனார் காலத்திலிருந்து
பாரதியார் காலம் வரையில் கையாளப் படாத ஒரு நவீன முயற்சி இது.

     அகவலை வசன கவிதை என அறியாதோர் கூறலாம். அது தவறு. அகவலுக்கு
யாப்புக்குரிய எல்லா லட்சணங்களும் உண்டு. வசன கவிதைக்கு இந்தச் செய்யுள்
லட்சணங்களில் ஒன்றிரண்டு குறையும். இதுதான் தாங்கள் எழுதுவது ‘கவிதை’ யல்ல, ‘வசன
கவிதை’ என்று அதை எழுதுபவர்களே கூறுவதன் காரணமும்கூட.

     தமிழ் இலக்கிய சரித்திரத்திலேயே நான் அறிந்த மட்டில் இதுவரை கவிதைகள்
யாப்பிலக்கணத்துக்கு அடங்கியே வந்திருக்கின்றன. மாங்குடி மருதனார் முதல் மகாமகோ
பாத்தியாய சுவாமிநாத ஐயர் வரை செய்யுள் பாடிய எவரும் இதே முறையைத்தான்
அனுசரித்து வந்திருப்பதாகத் தோன்றுகிறது. இளங்கோவும், சாத்தனாரும், கம்பரும்,
சேக்கிழாரும் இப்பழவழி சென்றே பெரும்புகழ் கண்டனர். இந்த முது முறையைத் தகர்க்க
அவர்கள் முயன்றதாகத் தெரியவில்லை.