பக்கம் எண் :

புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் 36

     அசையாலும் சீராலும் மட்டும் அழகான கவிதை ஆகிவிடாது. கவிதை என்பது
நடைமட்டுமல்ல. ஆனால் அது கருத்து மாத்திரமும் அல்ல. உதாரணமாக, வ.ரா. வின்
நடைச் சித்திரங்களில், நல்ல செய்யுள்களில்கூட இல்லாத அழகான கவிதைக் கருத்துகள்
இருக்கின்றன. அதனால் அதைக் கவிதை என்று விடலாமா? குமாரசம்பவம் போலவும்,
சிலப்பதிகாரம் போலவும், கு.ப.ரா. வின் சிறுகதைகள் இனிக்கின்றன. ஆனால் அதைக்
கொண்டே அக்கதைகளைக் காவியங்கள் என்று சொல்ல முடியுமா? இதுதான்
மறுப்பாளர்களின் வாதம். அவர்களுக்கு துணையாக பழஞ்சுவடிகளான தொல்காப்பியச்
செய்யுளியலும், யாப்பருங்கலவிருத்தியும், தண்டியலங்காரமும் இலக்கணம் பேசுகின்றன.
அழகான புதுமைகளை ஆக்குவதில் அறிவு முனைகிறது. அதன் பயன்தான் இலக்கணக்
கட்டுகளை உடைத்து விட்டு வெளிவந்த இப்புது முயற்சியும்.

     இதுவரையில் தமிழ் இலக்கியத்தில் இல்லாத அழகான அருமையான எண்ணங்கள்
வசன கவிதைகளிலே காணக்கிடைக்கின்றன. ‘சீர்பூத்த’ என்று தொடங்கி செய்யுள் இலக்கண
முறைப்படி பணங்கொடுத்த எவனையோ ஒரு பாவலர் பாடிய பாட்டுக்களைவிட தளை
தட்டும் ‘பூக்காரி’ ஆயிரம் மடங்கு அழகாகத்தான் இருக்கிறது. இலக்கண வழூஉ ஒன்றையே
ஆதாரமாகக் கொண்டு இவைகளை ஒதுக்குவது வடிகட்டின மடமை. இலக்கியப்பேழையில்
வைத்துக் காப்பாற்ற வேண்டிய புது இரத்தினங்கள் இவ்வசன கவிதைகள்.

     பழுத்த மாம்பழம் தித்திக்கிறது. பழுக்காத காய் புளிக்கிறது. இவைகள் இரண்டையும்
நீங்களும் நானும் உண்டு சுவைத்திருக்கிறோம். ஆனால் பழுத்தும் பழுக்காமலுமாய்
செங்காயாக இருக்கும்பொழுது நீங்கள் சாப்பிட்டிருக்கிறீர்களா; இல்லையென்றால்
சாப்பிட்டுப் பாருங்கள். காயின் புளிப்பும், கனியின் இனிப்பும் கலந்த ஒரு புதுச்சுவை.
இனிய ருசி-அதில் இருக்கக் காண்பீர்கள்.

     கனிந்த கனி போன்றது கவிதை. காயொத்தது உரைநடை இவைகள் இரண்டையும்
தான் நாம் நன்றாய் அனுபவித்திருக்கிறோம். காயும் கனியும் இல்லாத செங்காய்பதம் வசன
கவிதை. ‘கவிதையின் இனிமையும் உரை நடையின் விறுவிறுப்பும் இதில் இருக்கிறது.
செங்காயைச் சுவைப்பதிலும் ஒரு புது இனிமை உண்டு.”

(கலாமோகினி-30)
 

     இக்கட்டுரைக்கு எதிரொலி இலங்கையில் தோன்றியது. ‘ஈழ கேசரி’யில் வழக்கமாக
எழுதிவந்த ‘இரட்டையர்’, வசன கவிதை புதிய தோற்றம் அல்ல; முன்னரும் அது
வெவ்வேறு வடிவங்களில் தமிழில் வழங்கி வந்தது என்று வாதாடியிருந்தார்கள்.
சுவாரஸ்யமான அக்கட்டுரை ‘கலா மோகினி’யில் மறு பிரசுரம் செய்யப்பட்டது.
இரட்டையரின் சுவையான கருத்துக்களை நீங்களும் தெரிந்து கொள்ளலாமே என்பதற்காக
அந்தக் கட்டுரையை இங்கே தருகிறேன்;

     “பிஞ்சுமாகாது பழமுமாகாது” ‘செங்காய்’ என்று சொல்வார்களே, அந்த நிலைதான்
வசனகவிதைக்குரியது. யாப்பிலக்கண வரம்பை