பக்கம் எண் :

புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் 82

இன்றைய பேச்சு வளத்து அடிப்படையிலே புதுக்கவிதை செய்யமுயன்றிருக்கிறார்கள்.
அவரவர்கள் மொழியிலே அவர்களுடைய புதுக் கவிதை முயற்சிகள் வெற்றியும்
பெற்றிருக்கின்றன. ஐரோப்பிய மொழிகள் சிலவற்றிலே இப்போது புதுக்கவிதை திடமான
ஒரு இலக்கியக் குழந்தையாகக் காட்சி தருகிறது.

     தமிழில் புதுக்கவிதையின் அவசியத்தைப் பற்றிய வரையில் எனக்குச் சந்தேகமில்லை.
மரபுக் கவிதை செத்துவிட்டது. (அல்லது செத்துக்கொண்டிருக்கிறது. இன்று கவிகள் என்று
மரபுக் கவிதை எழுத வருகிறவர்கள் சொல்லடுக்குப் பாடை கட்டிக் கொண்டிருக்கிறார்கள்.)
புதுக்கவிதை தோன்றியே தீரும். ஆனால் அது எந்த உருவம் எடுக்கும் என்று இப்போது
யாரும் திட்டவட்டமாகச் சொல்ல முடியாது. ஏனென்றால் பலரும் பலவிதமான முயற்சிகள்
செய்து பார்த்து வெற்றி தோல்விகள் ஓரளவுக்காவது நிர்ணயமான பின்தான் புதுக் கவிதை
உருவாகி இலக்கியப் பூரணத்வம் பெற்ற விமரிசன விஷயமாக முடியும்.

(சரஸ்வதி ஆண்டு மலர்)


     க.நா.சு. சரஸ்வதியில் அதிகமாக கவிதைகள் எழுதவுமில்லை. கவிதை பற்றிய
அவருடைய கருத்துக்கள் குறிப்பிடத் தகுந்த பாதிப்பு எதையும் உண்டாக்கி விடவும்
இல்லை.

     சரஸ்வதி இதழ்களில் வேறு யாரும் புதுக்கவிதை எழுத முன் வரவுமில்லை.

     பொதுவாக, சரஸ்வதி கவிதைத்துறையில் எவ்விதமான சாதனையும்
புரிந்துவிடவில்லை. சோதனை முயற்சி என்ற தன்மையில் புதுக்கவிதையை அது விரும்பி
வரவேற்று ஆதரவு கொடுக்கவும் இல்லை.

     இதற்குக் காரணம் ‘சரஸ்வதி’ ஆசிரியர் விஜயபாஸ்கரனுக்கு கவிதையில் அவ்வளவாக
ஈடுபாடு கிடையாது. நல்ல கவிதைகளை ரசிக்கக்கூடியவர்தான் அவர். என்றாலும்
புதுக்கவிதை என்பது பரிகாசத்துக்கு உரியது என்றே நண்பர் கருதியதாகத் தோன்றியது.
‘தட்டுங்கள்-திறக்கப்படும்’ என்ற கேள்வி பதில் பகுதியில் அவர் எழுதியுள்ள இரண்டு
கூற்றுகளை நான் இதற்கு நல்ல உதாரணமாகக் காட்ட முடியும்.

     கே: வசனத்தில் கவிதை வருமா?
     ப: ஓ! வசனத்தில் கவிதை வரும்: கவிதையில் வசனம் வரும். இரண்டிலும் வசன
கவிதை வரும். ரெண்டுங்கெட்டான் தமிழர்களுக்கு எதுதான் வராது?

சரஸ்வதி, 1959-8வது இதழ்


     கே: வசன கவிதை என்றால்?
     ப: வெஜிடபிள் பிரியாணி என்று அர்த்தம்.

சரஸ்வதி, 1959-11



     ஆகவே, ‘சரஸ்வதி’ மூலம் புதுக்கவிதை புத்துயிர்ப்போ புதிய வேகமோ பெற முடியாமல் போனதில் ஆச்சர்யம் எதுவுமில்லை.