சமூக வெறி சுதந்திர வேகத்தினால் பிந்திய பாரதியாரும் தமிழக்கவிதைக்குப் புதுமை தர முயன்றார்கள். இருவருக்கும் இசை நயமும் உதவியது. இந்த இசை நயம் ஓரளவுக்குத் தனிக் கவிதை நயத்தைத் தீர்த்துக்கட்ட உதவியது என்றும் அதே மூச்சில் சொல்லலாம். தமிழோடு இசை பாடுகிற மரபு இருக்கலாம். ஆனால், சங்கநூல் சிலப்பதிகார (இசையற்ற அகவல், சொல்லளவு) மரபு தமிழுக்கு உண்டு என்று ஏற்றுக்கொள்ளத்தானே வேண்டும்! தமிழில் புதுக்கவிதை இலக்கணமாக இடைக்கால இலக்கண அணி மரபுகள் ஒழித்து மிகப்பழைய மரபுகளைத் தேட வேண்டும் என்பது ஒரு விதத்தில் தெளிவாகிறது என்றே சொல்லலாம். பல ஐரோப்பிய மொழிகளில் கவிதையைச் சாகவிட்டு விடுவதில்லை என்று பல புதுக்கவிகள் பிடிவாதமாகவே புதுக்கவிதை செய்து வருகிறார்கள். இந்தப் புதுக்கவிதையிலே புதுசாக இன்றைய வாழ்க்கைச் சிக்கலைப் பூரணமாகப் பிரதிபலிக்கும் ஒரு வார்த்தைச் சிக்கலும், இன்றையப் புதுமைகளை எல்லாம் தொட்டு நடக்கும் ஒரு நேர் நடையும் அகவல் சந்தம் என்று நாம் சொல்லக்கூடிய ஒரு பேச்சு நடை அடிப்படைச் செய்யுள் வேகமும், எல்லாவற்றிற்கும் மேலாக இடைக்காலப் பழமைக்கு மேலாக, பண்டைக்கால, ஆதிகாலப் பழமையைப் போற்றும் ஒரு திறனும் காணக்கிடக்கின்றன. உதாரணமாகப் பார்த்தால், டி.எஸ்.எலியட் என்பவர் புதுக் கவிதை ஆங்கிலத்தில் எழுதுகிறார் என்றால் அவர் இன்றைக்குரிய ஒரு கோணத்தில், ஒரு முகத்தில் நின்று, இன்றைய வசன கவிதை நடையை மேற்கொண்டு, அதற்கிலக்கணமாக நானூறு வருஷங்களுக்கு முன் எழுதிய ஆங்கில ஆதிகால நாடகாசிரியர்களின் அகவல் பாணியை மேற்கொண்டு, பேச்சுச் சந்தத்துக்கிசைய கவிதை செய்கிறார். இடைக்கால மரபுகளைப் புறக்கணித்து விடுகிறார். ஆனால் பழைய இலக்கண மரபை அவர் அப்படியே கொள்வதும் இல்லை. இன்றையப் பேச்சு வேகத்துக்கேற்ப சொல் என்று மக்களின் வாயில் வழங்குவதின் அடிப்படையில் கவிதை செய்கிறார். அதேபோல எஸ்ரா பவுண்டு என்கிற ஆங்கிலக் கவிஞர் ப்ரோவான்ஸ் கீதங்களையும் சீனத்துக் கவிதைகளையும், ஜப்பானிய ஹைக்குகளையும் தன் மரபாக்கிக்கொண்டு புதுக்கவிதை செய்கிறார். அவருடைய கவிதைப் பாணி இன்று ஆங்கிலத்தில் கவிதை எழுதுகிற எல்லோரையும் பாதித்திருக்கிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலே கவிதை செய்த வால்ட் விட்மன் வசனத்தையே கவிதையாக்கி வசனத்தையே வரிவரியாக வெட்டிக்காட்டி, விஷய அமைதி தந்து கவியாக வெற்றி பெற்றார். இன்றைய மொழிகள் பலவற்றிலுள்ள புதுக்கவிதைக்கு பொதலோர், ரிம்போ, மல்லார்மே முதலிய பிரெஞ்சுக் கவிகளையும், வால்ட் விட்மனையும் தான் ஆதாரமாகச் சொல்லுவார்கள். இவர்களையெல்லாம் பற்றி நான் இங்கு குறிப்பிடுகிறேனே தவிர, விவாதிக்கவில்லை. ஏனென்றால் தமிழில் புதுக்கவிதை விஷயத்துக்கு இவர்கள் புறம்பானவர்கள். ஆனால் இவர்கள் செய்திருப்பது என்னவென்றால் அன்று ஆட்சி செலுத்திய மரபைத் தகர்த்தெறிந்து விட்டு இவர்கள் ஒரு பழைய கவிதை மரபை ஆதாரமாக வைத்து, | | |
|
|