பக்கம் எண் :

புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் 80

     பாரதியாருடைய கவிதையிலே தெளிவு, எளிமை இரண்டுக்கும், மேலாக ஒரு வேகம்
இருந்தது. இந்த வேகம் எப்படி வந்தது என்று ஆராய்ந்து பார்க்கும் போதுதான் உயர்
கவிதை எப்படித் தோன்றுகிறது என்பது தெரியவரும். உள்ளத்தில் உள்ள உண்மை ஒளி
வாக்கினிலும் வந்ததனால் ஏற்பட்டதொரு வேகம் இது. எப்படி வந்தது என்பதுதான் கலை
ரகசியம். எப்படியோ வந்தது-பாரதியார் உயர்ந்த கவியானார். இந்தக் கவிதை உண்மையை
அலசிப் பிய்த்து எடுத்துப் பார்க்க முடியாது. ஆனால் சூக்ஷ்மமாக இருப்பது என்பது
நிதரிசனமாகவே தெரிகிறது. உயர் கவிதையின் உயிர் இது.

     இந்தக் கவிதை உண்மைக்கு இன்றைய வாரிசாக புதுக் கவியும் புதுக்கவிதையும்
தோன்ற வேண்டும்.

     பாரதியார் மக்களிடையே பொதுவாகவும் தனித் தனியாகவும் கண்ட குறைகளுக்கு
எல்லாம் சுதந்திரமின்மையே காரணம் என்று நம்பினார். சுதந்திரம் வந்துவிட்டால்
அக்குறைகள் தானாகவே நீங்கிவிடும் என்றும் நம்பினார். சுதந்திரம் வந்து விட்டது.
தனிமனிதர்களின் குறைகள் பன்மடங்காக அதிகரித்து விட்டது போல் இருக்கிறது. பொது
வாழ்வு, சமுதாயம் பற்றியோ கேட்கவே வேண்டாம். பொருளாதார, சமூக, அரசியல்
துறைகளில் மட்டுமல்ல, நல்லது தீயது அடிப்படையிலும், ஆன்மீக பராமாத்திகத்
துறைகளிலும் போலிகளும் மோசடிகளும் மலிந்து விட்டன. குறைகள் நிறைந்து நிற்கின்றன.

     கவிதை மனிதனின் குறைகளைப் பற்றி மட்டும்தான் சொல்ல வேண்டுமா என்று
கேட்கலாம். குறையைச் சொல்வதும், நிறையைச் சொல்வதும் ஒன்றுதான். ஒன்றைச் சொல்லி
மற்றொன்றை விடமுடியாது. இலக்கியத் துறைகள் எல்லாமே சமுதாயம், தனி மனிதன்
என்கிற இரண்டு பிரிவிலும் குறைகளையும் நிறைகளையும் சொல்லியும் சொல்லாமலும்
அறிவுறுத்துகின்றன என்பது தப்பமுடியாத நியதி.

     இந்தக் காலத்துக்கான கவிதை உண்மையை இந்தக் காலத்துக்கேற்ற சிக்கலான
வார்த்தைச் சேர்க்கைகளில், நிரந்தரமாக்குவதற்கு, அழியாத இலக்கிய உண்மையாக்குவதற்கு
புதுக்கவிதை தேவை. அப்போதுதான் சங்க காலத்தின் சிறந்த கவிதை சிருஷ்டிகளையும்,
சிலப்பதிகாரம், கம்ப ராமாயணம் போன்ற நூல்களின் தனித் தன்மையையும் நாமும் இன்று
எட்டமுடியும். இன்றும் ஒரு புதுச் சிலப்பதிகாரமும் ஒரு கம்பராமாயணமும் தோன்ற
முடியும்...

     செய்யுள் இயற்றுபவர்களின் எண்ணிக்கை நம்மிடம் இன்று அதிகம்தான் என்றாலும்,
செய்யுள் எல்லாம் கவிதையாகி விடாது என்பதில் என்ன சந்தேகம்? யாப்பு, இலக்கணம்,
அணி என்று அசைக்க முடியாத சட்டங்கள் இட்டு, எதுகை, மோனை, சீர், தளை
என்றெல்லாம் நைந்துபோன சிந்தனைகளை எடுத்து எடுத்து அளித்து வந்த
தமிழ்க்கவிதைக்கு கோபாலகிருஷ்ண பாரதியாரும் சுப்ரமண்ய பாரதியாரும் ஓரளவுக்குப்
புத்துயிர் தந்தார்கள். கவிதையோடு இசை என்னும் உயிர் சேர்த்துக் கவிதை செய்தார்கள்
அவர்கள்.

     பக்தி விசேஷம், இசை முதலியவற்றால் முந்திய பாரதியாரும்