பக்கம் எண் :

79  வல்லிக்கண்ணன்

சரஸ்வதியில்


     மீண்டும் புதுக்கவிதையும், அது பற்றிய பேச்சும் எழுந்தது 1958-ல் தான். இப்போது
கவிதை எழுதி கட்சி கட்டியவர் க.நா.சுப்ரமண்யம்.

     ‘சரஸ்வதி’ கவிதையில் விசேஷ அக்கறை காட்டியதில்லை. ஒரு இலக்கியப் பத்திரிகை
என்றால் அதில் கவிதையும் இடம் பெறவேண்டும் என்ற நோக்கிலேதான் ‘சரஸ்வதி’
கவிதைகளை பிரசுரித்துக் கொண்டிருந்தது. மரபுக் கவிதைகள்தான் அதில் வெளிவந்தன.
இரண்டு மூன்றாவது வருடங்களில் ஒரு கவிதைகூட இடம் பெறாத இதழ்கள் பல உள்ளன. அதன் பின்னரும் கூட இந்த நிலைமையில் தீவிர மாற்றம் எதுவும் ஏற்பட்டு விடவில்லை.

     ஐந்தாவது ஆண்டில், ‘சரஸ்வதி’ மாதம் இருமுறைப் பத்திரிகையாக மாற்றப்பட்ட
போது, க.நா.சு. அதிகமான ஒத்துழைப்புத் தர முன் வந்தார். அப்போது அவர்
புதுக்கவிதையும் எழுதி உதவினார்.

     20-9-1958 இதழில் அவர் ‘மயன்’ என்ற பெயரில் எழுதிய கவிதை பிரசுரமாயிற்று.
அது தான் ‘சரஸ்வதி’யில் பிரசுரமான முதலாவது புதுக்கவிதை.

மின்னல் கீற்று


     “புழுக்கம் தாங்காமல் அன்றையத் தினசரியை விசிறிக் கொண்டு நடந்தேன்; இந்தப்
புழுக்கத்திலே மழை பெய்தால், நன்றாக இருக்குமே என்று நான் நினைத்தேன்.
தலையுச்சியிலே ஒரு குளிர் தூற்றல்- ஆஹா! இன்பம்! சட்டச் சடவென்று பத்துத் தூற்றல்-
ஆஹா! ஆஹா! பத்தே பத்துத் தூற்றல்தான். பின்னர் புழுதியைக் கிளறிய காற்று விசிற
மழை ஓடி நகர்ந்து விட்டது. கரிய வானம் பிளந்து கொண்டு கோடை மின்னல் கீற்று
தேடிற்று. கையை நான் நீட்டியிருந்தால் அக்கோடை மின்கீற்று என்னைத் தொட்டிருக்கும்;
உலகை அழித்திருக்கும். தினசரிச் செய்திகள் கற்றிருக்கும்; தூற்றல் இன்பம் மரத்திருக்கும்;
புழுக்கம் வெளி நிறைந்திருக்கும்; புழுதி எழுந்து படர்ந்திருக்கும்; உலகம் ஒழிந்திருக்கும்.
நான் தனியிருந்து என்ன செய்வதென்று கை நீட்டாதிருந்தேன்.”

     இப்படி சொந்தமாகவும், ஆங்கிலக் கவிதைகள் சிலவற்றைத் தழுவியும் க.நா.சு.
அஞ்சாறு கவிதைகள் எழுதினார். பிறகு, புதுக்கவிதை சம்பந்தமான தனது கருத்துக்களை
விளக்கும் கட்டுரை ஒன்றை எழுதினார். அது ‘சரஸ்வதி’ 1959ம் ஆண்டு மலரில்
பிரசுரமாயிற்று.

     அவர் கூறியுள்ள கருத்துக்கள் கவனிப்புக்கு உரியவை- ‘எளியபதங்கள், எளியசந்தம்’
என்றும், ‘தெளிவுறவே அறிந்திடுதல், தெளிவுதர மொழிந்திடுதல்’ என்றும் சுமார் ஐம்பது
வருஷங்களுக்கு முன் சுப்ரமண்ய பாரதியார் புதுக்கவிதைக்குரிய லட்சணங்களை எடுத்துச்
சொன்னார். எளிமை, தெளிவு என்கிற இரண்டு லட்சணங்களையும் பின்பற்றிப் பின்னர்
கவிகள் சிலர் எழுதினார்கள்.