கவிதைக்குப் பிறப்பிடமான ஒருமையையும் இசைவையும் உணர்கிறோம். எனவே, இவ்வரியைப் படித்ததும் ஊன் பொதிந்த குறுகிய குடிசையில் தொல்லைப்படும் நம் சிற்றுணர்வு விடுதலை பெற்று விரிந்து பறக்க உதவிய இவ்வனுபவத்தைக் கவிதை என்று உணர்கிறோம். இதே அகண்ட இசைவைத்தான், கவிதைத் தன்மையைத்தான், பாரதியாரின் ‘காட்சி’யிலும் காண்கிறோம். வசன கவிதைக்கு இதுவே மற்றொரு சிறந்த உதாரணமாகும். பாரதியாருக்குப்பின் இத்தடத்தில் சென்றவர்கள் குறைவு. கு.ப. ராஜகோபாலன் ஓரளவும், நான் சற்று விரிவாகவும், வல்லிக்கண்ணன் சிறிதும் இத்துறையில் சோதனைகள் செய்துள்ளோம். புதுமைப்பித்தன் தம் கவிதையில் புதிய கவிதா சோதனைகள் நடத்தினார். ஆனால் பெரும்பகுதிகள் கலிவெண்பா வாகவே ஒலிக்கின்றன. இச்சோதனையை இப்பொழுது சிலர் தொடர்ந்து செய்வது வரவேற்கத்தக்கது. வெற்றி தோல்வி கவிஞனுக்கு இல்லை. | | |
|
|