பக்கம் எண் :

புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் 92

தெரிவிக்க ஏறக்குறைய குறிப்பிட்ட வார்த்தைகளால் முடியும். வேறு சொற்களை
உபயோகித்தால் கருத்தும் உணர்ச்சியும் மாறிவிடும். கருத்திலோ உணர்விலோ ஏற்படும்
இசையே ஒலிநயம் என்ற தனிப்பேருடன் நடமாடுகிறது.

     பாம்பைப் பற்றிய மரபான கருத்தொன்றை ஆராய்ந்து பார்ப்பது இந்த வாதத்திற்குத்
தெளிவை அளிக்கும். பாம்புக்குக் கட்செவி என்று பெயர். அதாவது பாம்புக்குக் காது
கிடையாது என்று ஏற்படுகிறது. ஆனால் மகுடிக்கு முன் ஆடுகிறதே என்று சொல்லக்கூடும்.
பழம் நூல்களெல்லாம் பாம்புக்கு இசை உணர்ச்சி அதிகம் என்று கூறுகின்றனவே என்று
சொல்லக்கூடும். ஊர்வன வகை ஆராய்ச்சியாளர்கள் பாம்பு இசையைக் கேட்டு
ஆடவில்லை; கண்ணுக்குத் தெரியும் மகுடியோ மற்றப் பொருளோ அசைவதற்கு ஏற்ப
ஆடுகிறது என்று முடிவு செய்திருக்கிறார்கள். எனவே பாம்பு ஒலிநயம் காண்பதாகக்
கூறுவதெல்லாம் ஒரு பிரமை. மரபுக்கிணங்கிய கவிதையின் ஒலிநயம் என்று கூறுவதும்
இதைப் போன்ற ஒரு பிரமையே. உண்மையில் மகுடியின் இசையைப்போல் கவிதையில்
ஆடும் கருத்துக்களையும் உணர்ச்சிகளையும் அனுபவித்துத்தான் கவிதாரசனை
பெறுகிறோமே அல்லாது வேறெதுவுமில்லை என்றே கூறலாம்.

     வசன கவிதையை முதல் முதலாகக் கண்டு பிடித்தவர் அமெரிக்கக் கவிஞர் வால்ட்
விட்மன். அன்று முதல் இப்புதுத்துறையில் முயற்சிகள் நடை பெற்றே வருகின்றன.
இம்முறையால் கவிதையைத் தேக்கிக் காட்ட முடியாதென்பதற்குத் தகுந்த காரணங்களை
யாரும் சொல்லவில்லை. மனிதனால் சந்திரனுக்குப் போக முடியாதென்று கூற யாரும் இன்று
துணிவு கொள்ள மாட்டார்கள். புறவுலகில் சாத்ய மற்றதென்று கருதப்படுவது சாத்யமாகும்
பொழுது மனத்துறையில் மட்டும் புதுமை ஏன் சாத்யமாகக் கூடாது? யாப்புக்கிணங்கிக்
கவிபுனைபவர்களில் சொத்தை சொள்ளை தோன்றுவது போல வசன கவிதைத் துறையிலும்
இருக்கலாமே ஒழிய, புது முறைக்கே தோல்வி ஏற்பட்டு விட்டதாகத் தர்க்க ரீதியாகக்
கொள்ள முடியாது. கருத்துக்களின் இசைவே, உணர்வின் சலனமே, கவிதாசிருஷ்டியின்
ஒருமையே புதுக்கவிதையாகும்.

     ‘ரவி, மதி, தாரகைக்கு வணக்கம்’ என்று எட்வர்ட் கார்ப்பெண்டர் என்னும்
அமெரிக்கக் கவி ‘ஜனநாயகத்தை நோக்கி, என்னும் நீண்ட கவிதையைத் தொடங்குகிறார்.
இவ்வரியை ஒரு நிமிஷம் கவனிக்கலாம். இது நம்முடைய அறிவுக்கு எந்தச் செய்தியையும்
சொல்லவில்லை. எந்தப் பொருளையும் குறிப்பிடவில்லை. ஆனால் நமக்குப் புதிய உண்மை
ஒன்றை-மறந்து போனதை நினைவூட்டுவதென்றாலும் சரிதான்-இது கூறுகிறது. புதிய கதவம்
ஒன்றைத் திறந்து உலக சிருஷ்டியுடன் நமக்கிருக்கும் உறவு முறைகளைக் காட்டுகிறது.
சிருஷ்டியின் பெருவெளியில் நம்மைப்போல் செல்லும் சகப்பிராணிகள் இருப்பதையும்,
நாமும் அவர்களும் சேரந்து ஒரே நோக்குடன் தோழமையுடன் இயங்குவதையும்
சுட்டிக்காட்டி, குசலம் விசாரித்து, வணக்கம் செலுத்துகிறது. சிருஷ்டி என்னும் மகத்தான
கூற்றுத்தான் கவிதை என்ற உண்மையை நாம் உணர்கிறோம்.