எச்சரிக்கை இது இலக்கிய விசாரமேயன்றி, மன இயல் விமர்சனமே அன்றி, சரித்திர ரீதியான தொடரல்ல என்பதை மறக்கலாகாது. ‘செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே’ என்று பாரதியார் பாடினார். இயற்கையாக ருசியை நாக்கின் மூலமே உணர்கிறோம். காதின் மூலம் இந்த ருசியை உணரலாம் என்பது இயற்கைக்கு முரண்பட்டது. ஆனால் கவிஞர் இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே என்கிறாரே. நாக்கின் தொழிலைக் காதின் மேலேற்றித் திடுக்கிடும் புதிய அனுபவத்தைக் கூறுகிறாரே! ஆம். நாக்குக்கு இனிப்பாவது போல காதுக்கு இனிப்பாக இருக்கிறது என்கிறார். அதாவது பொறிகளுக்குள்ள வேறுபாடு உடலியலைப் பற்றிய வரையில் உண்மையே ஒழிய மன இயலைப் பற்றிய வரையில் வேறுபாடாகாது. இரண்டின் விளைவும் ஒன்றுதான் என்ற தத்வ ரகசியத்தை மறைமுகமாகக் காட்டுகிறார். வேறுவிதமாகக் கூறினால், பொறிகள் தங்கள் தங்கள் தொழில்களைப் பரிவர்த்தனை செய்து கொள்ள இயலும் என்ற தத்வரீதியாகக் கொள்ளலாம். கவிதையின் ஒருமைப்பட்ட, உடனடியான அனுபவத்தை விளைவிப்பது ஆறாவது பொறியாகி மனமேயாகும். பொறிகள் தபால்காரனைப் போல். செய்தி என்று உணரும் சக்தி மனத்திற்குத்தான் உண்டு. எனவேதான் பொறிகள் தனித் தன்மையை இழந்து, பதிலியாகக்கூட இயங்கி கவிதையென்னும் விளைவுக்குக் கருவியாகின்றன. நாக்கின் தொழிலைக் காது மேற்கொள்வது போல, காதின் தொழிலை கண் ஏற்க முடியாது? முடியும் என்று கவிஞன் கண்ட பொழுது தோன்றியதுதான் வசன கவிதை. இந்தக் காரணத்தாலேயே அச்சு இயந்திரம் தோன்றிய பிறகே வசன கவிதை சாத்யமாயிற்று, காதை அடிப்படையாகக் கொண்ட எதுகை மோனைகளுக்கு இப்பொழுது அவசியமில்லாமல் போய்விட்டதென்பது கசப்பான புதிய உண்மை. எதுகை மோனைகளாலும், சந்தத்தாலும் கவிதைக்குக் கிடைத்து வந்த இசைப் பயனை ஸ்தூல நிலையிலிருந்து சூக்ஷ்ம நிலைக்கு உயர்த்தக் கூடிய கவிதை முறை சாத்யமாகி விட்டது. சொற்களைத் தொடுக்கும் ஜாலத்தாலேயே கவிதையின் பிறப்பிடத்திலேயே அதை எழுப்பிக் காட்டும் கடினமான கவிதைக் கலைக்குத் தூண்டுதல் ஏற்பட்டுவிட்டது. இசையை இசைவாக மாற்ற வேண்டிய கடமை உண்டாகி விட்டது. எனவே பல கோடி ஒலி அமைப்புகளிலே சிலவற்றைத் தேரந்தெடுத்துக் கவிதையில் ஒலி இன்பத்தைக் கூட்டுவது போல பல கருத்துக்களையும் உணர்ச்சிகளையும் பொறுக்கி எடுத்து இசையவைக்கும் முயற்சி புதிய கவிதை ஆயிற்று, யாப்புக் கிணங்காத வகை என்று குறிப்பிடுவதற்காகவே கவிதை என்ற சொல்லுடன் ‘வசன’ என்ற சொல்லையும் சேர்த்து இப்புதிய முறையைக் குறிப்பிடுகிறார்கள். பார்த்தால் வசனம்; பாய்ந்தால்-நெஞ்சில் பாய்ந்தால்-கவிதை. மரபுக்கிணங்கிய கவிதையில் ஒலி நயம் என்று ஏதோ தனியாக இருப்பதாகக் கூறுவதே ஒரு பிரமை என்று வாதிக்கக்கூட இடமிருக்கிறது; கருத்துக்களையும் உணர்ச்சிகளையும் கவிதையில் | | |
|
|