பக்கம் எண் :

புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் 90

     சவுக்கைத் தோப்பின் வழியே காற்று பாய்ந்து சென்றபிறகு தோன்றும் ஓயுமொலி
சொல்லொணாத ஏக்கத்தை உண்டாக்குகிறது என்பது நம்முடைய அனுபவம். ஆனால்
மனிதன் உயிரின் பெருவெள்ளத்திலிருந்து பிரிந்த தனித்துளி; மூலத் தொடர்பறுந்து
வாழ்வெனும் துயரக்கடலில் விழுந்து தத்தளிப்பதாகக் கருதி தவிக்கும் ஜீவன். இந்தப்
பிரிவினைத் துயரத்திற்கு வேதனைப்படுவது போன்ற வேதனை தரும் சொற்களையும்
இவ்வேகத்துடன் கோர்த்து விட்டால் இசை கவிதையாகி விடுகிறது. காற்றில் தோன்றி
காற்றில் மறையும் இசை கால்பெற்று நிலைத்து உணர்ச்சிக்குத் தீயூட்டும் சிறப்பை
அடைகிறது. இப்பொழுது இசை வெறும் குறிப்பற்ற கிளர்ச்சியாக இல்லாமல் பொருளுள்ள
பாட்டாகிறது. கவிதையாகிறது.

     ஆனால் ஒன்று, இரண்டு வகையிலும் காதென்னும் பொறி வழியே தான் இந்த
இன்பமும் அனுபவமும் தோன்றியாக வேண்டி இருக்கிறது. காதை முன்னிறுத்தியே
இதுவரை கவிதை எழுதப்பட்டு வந்திருக்கிறதென்பதை இங்கு நினைவிலிருத்திக் கொள்ள
வேண்டும். இன்னும் கவிஞர்களில் பலர் கவிதை புனைவதற்குமுன் சந்தத்தையோ
பாவகைகளின் இரண்டொரு வரிகளையோ நினைவில் கொண்டு பரிசலாக்கி கவிதையின்
சொற்களை மீதேற்றி கவிதை புனைவது எனக்குத் தெரியும். யாப்பிலக்கண அறிவின்றியே
வெற்றிகரமாக கவிஞர்கள் இந்தக் காரணத்தினால்தான் ஒலிக் குற்றமின்றி கவிதை
புனையமுடிகிறது.

     இப்பொழுது முக்யமான பிரச்னை என்னவென்றால், காதை நம்பாமல் கவிதையைத்
தோற்றுவிக்க முடியாதா என்பதுதான். அனுபவத்தில் புதுமையைக் காட்ட விரும்பும்
கவிஞன் இது இயலும் என்பதைக் கண்டான். கருத்திலே மடை திறக்கும் உணர்வு
நெகிழ்ச்சியிலே, சுட்டிக் காட்டும் பேருண்மையிலே கவிதை பொதிந்து கிடக்கிறதென்ற
உண்மையைப் புதுக்கவிஞன் கண்டுபிடித்தான். கவிதை சொற்களில் இல்லை ஒலி நயத்தில்
இல்லை என்பதைக் கண்டு கொண்டான். இரண்டுக்கும் காரணமான தன்னிடத்தில்
இருக்கிறதென்ற பேருண்மையை, அதிருஷ்ட வசத்தால் தான் பெற்ற அனுபவத்தில்
இருக்கிறதென்ற ரசனை நுட்பத்தை உணர்ந்தான்.

     இந்த அடிப்படையின் மீது பார்க்கும் பொழுது கவிதை காதை நம்பித்தான்
வாழவேண்டுமென்ற அவசியம் தோன்றவில்லை. கவிதையின் மரபுக் கொத்த அங்கங்களும்
இக்கருத்துக்கு ஆதரவாகவே இருக்கின்றன. கவிதைக்கு உயிர் நாடியான உவமை அணி
பெரும்பாலும் கண்ணைச் சார்ந்த அலங்காரம். காதை நம்பிக் கவிதை பிறக்க
வேண்டியிருந்த நிலையிலும் கூட, கவிதையின் சிறப்பெல்லாம் ஐம்பொறிகளின் தயவையும்
மீறிய நேரிடையான அனுபவத்தால், இயற்கையான நுண்ணுணர்வால், ஏற்படுவதென்ற
உண்மையை எப்படி மறந்துவிடமுடியும்?

     இந்த உண்மையின் காரணமாகவே, ஒரு பொறிக்கு உரித்தான தொழிலை மற்றொரு
பொறியின் மீதேற்றி கவிதையில் சிறப்பைக் கூட்டும் கற்பனை முறை கையாளப்பட்டு
வந்திருக்கிறது.

     ஒரு உதாரணத்தைக் கொண்டு இதை ஆராய்வோம். ஆனால் ஒரு