பட்டதே ஒழிய நிரந்தரமானதென்று கருதக் கூடாது. நோக்கத்தினால் அவை பாகுபாட்டைச் சேர்ந்த தன்மையோ மற்றொரு பாகுபாட்டைச் சேர்ந்த பெருமையையோ அடைகின்றன. ஜுரத்தில் வேகம் ஏறுவது போல் உணர்ச்சி கூடினால் தரையில் நடக்கும் வசனம் சிறகு பெற்றுக் கவிதையாகிவிடும். ஒரு உதாரணத்தைக் கொண்டு பார்ப்போம். பாரதியார் ‘காட்சி’ என்ற தலைப்பில் சில வசனகவிதைகளை இயற்றித் தந்திருக்கிறார். ‘இவ்வுலகம் இனியது. இதிலுள்ள வான் இனிமை உடைத்து காற்றும் இனிது. தீ இனிது. நிலம் இனிது. ஞாயிறும் நன்று. திங்களும் நன்று. வானத்துச் சுடர்களெல்லாம் மிக இனியன. மழை இனிது. மின்னல் இனிது. இடி இனிது.’ என்று முதல் கவிதை தொடங்குகிறது. இது வசனமா? தர்க்க அறிவுக்கு என்ன புரிகிறது. கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டது போலல்லவா இருக்கிறது. சுருதி பேதமாக அல்லவா இருக்கிறது? ஆம். வசன ரீதியாகப் பார்த்ததால் விளைந்த வினை இது. இது கவிதை. செய்தி சொல்ல வந்த, விஞ்ஞானத்தை விளக்க வந்த வசனமல்ல. சிருஷ்டியின் அனுபவத்தைக் கூறும் உணர்வுள்ள சொற்கள். எனவே வசனம் கவிதையாக முடியாதென்று முன் கூட்டியே முடிவு செய்வது தர்க்கத்திற்கு ஒவ்வாது. மனிதனுடைய மொழிகள் அடைந்துள்ள மாறுபாட்டையும், கவிதை என்னும் துறை அடைந்துள்ள வளர்ச்சியையும் சரித்திர ரீதியாக உணராத குற்றம்தான் இம்மாதிரி அபிப்பிராயங்களுக்குக் காரணமாகிறது. கவிதையின் சரித்திரத்தைப் பார்த்தால், பாட்டிலிருந்தே கவிதை பிறந்திருக்கிறதென்று தோன்றுகிறது. முதல் முதலாக மனிதன் பாடத்தான் பாடியிருப்பான். இத்துறையில் அவனுடைய ஆதி குருமார்கள் என்று குயிலையும் மாட்டையும் கரிச்சானையும், நீரொலியையும் இடியையும் இவை போன்ற எண்ணற்றவையையும் தான் கொள்ள வேண்டும். எனவே பாடினான் என்பதைவிட இசைத்தான் என்றே கூறலாம். ஒருக்கால் வாயால் இசைக்கும் முன்னரே இசைக்கருவிகளைக் கண்டுபிடித்திருக்கவும் கூடும். வண்டடித்த மூங்கிலில் எழும் ஒலியைக் கொண்டே புல்லாங்குழல் கண்டு பிடித்தார்கள் என்று சொல்லக் கேட்டிருக்கிறேன். இசைக் கருவிகளைக் கொண்டு இசையறிவு விரிந்திருக்கக்கூடும் நாதசுரத்தில் சாகித்யத்தைப் பழக தத்தகாரங்களே போதுமானவை என்று சொல்லப்படுவதையும் இங்கு நினைவூட்டிக் கொள்ளலாம். வார்த்தைகளை உருவி விட்ட மெட்டைத்தானே வாத்யத்தில் கேட்கிறோம். முதல் முதலாக சொல்லுக்கு அதிக இடமற்ற இசையே பாட்டாக உலவிற்று என்று கருதலாம். மனிதனுடைய சிந்தனையும் உணர்ச்சியும் வளர்ச்சி அடையத் தலைப்பட்ட பிறகு வெறும் இசையால் உண்டாகும் இன்பத்துடன் பொருளையும் மன நெகிழ்ச்சியையும் வியப்பையும் துயரத்தையும் சொற்களின் மூலம் ஊட்டி இசைக்க நிரந்தரமான அடிப்படையையே அளிக்கலாமே என்ற ரகசியம் மனிதனுக்குப் புலனாகிவிட்டது. | | |
|
|