பக்கம் எண் :

இலக்கணக் கட்டுரைகள்
 
126

17

17. எகர ஒகர இயற்கை

    தமிழின் தொன்மை முன்மை தாய்மை தலைமை முதலிய தன்மைகள், கடந்த மூவாயிரம் ஆண்டாகத் தமிழ்ப் பகைவரால் மறைக்கப் பட்டும், ஆராய்ச்சியின்மையால் தமிழரால் அறியப்படாதும் இருப்பதால், எழுத்து என்னும் அடிப்படை நிலையிலேயே, மாணவர்க்கு மட்டுமன்றி ஆசிரியர்க்கும் மயக்கமுண்டாமாறு, பல்வேறு கூற்றுகள் தமிழுக்கு மாறாகவும் உண்மைக்கு முரணாகவும் அடுத்தடுத்துத் தமிழரென்பாரும் நிகழ்த்தி வருகின்றனர். இங்ஙனம் தம் செயலை அறியாது காட்டிக் கொடுப்பாரும் அறிந்தே காட்டிக் கொடுப்பாரும் ஆகிய இருவகை வையாபுரிகளை அல்லது கேள்போற் பகைவரைத் துணைக்கொண்டே, வாள்போற் பகைவரும் தமிழைக் கெடுக்கத் துணிந்து முனைகின்றனர்.

    "தொல்காப்பியனார் தமது நூலில், அக்காலத்தில் வழங்கி வந்த எழுத்துகள் எவ்விதம் வரிவடிவில் எழுதப்பட்டு வந்தனவென்பதைக் குறிப்பிடவில்லை; ஆயினும் சில எழுத்துகள் புள்ளிபெற்று நிற்பதை மாத்திரம் குறிப்பிட்டுள்ளார். அவ் வெழுத்துகள் குற்றியலுகரம், குற்றிய லிகரம், மகரக்குறுக்கம், ஆய்தம், மெய்யெழுத்து, எகரம், ஒகரம் என்பன.

    "உயிரெழுத்துகளுள் அ, இ, உ, எ, ஒ ஆகிய ஐந்தும் தமக்கு இனமான நெடில்களை உடையன. அ, இ, உ ஆகிய மூன்றுக்கும் இனமாகிய நெடிலைத் தெரிவிக்க அக் குறில் உருவத்துக்கு ஓர் அதிகப்படியான குறி சேர்க்கப்பட்டுள்ளது. ஆனால் எகரம் ஒகரம் ஆகிய இரண்டின் விஷயத்தில் குறிலைக் குறிக்கும்பொழுது அதிகப்படியான புள்ளி சேர்க்கப்பட்டுள்ளன. குறிலின் நீட்சியே நெடில். ஆதலின்  நெடிலின் வேறுபாடு விளங்கக் குறிலுருவத்துக்கு அதிகப்படியான குறியிட்டு நெடிலை உணர்த்துவதே இயற்கை. எகர ஒகரங்கள் அந்தப் பொதுவிதிக்கு மாறுபட்டுள்ளன. ஆசிரியரும் அ, இ, உ ஆகியவற்றுக்குரிய நெடிலுருவத்தைக் குறிப்பிடாமல், இவ் விரண்டை மட்டும் சிறப்பாக எடுத்துக் கூறுகிறார்.

    "ஆதலின், எகர ஒகரங்களுக்குக் குறில் இல்லாமல் நெடிலே வழங்கும் ஒருவகையினின்றும் இவ் வெழுத்துகளின் உருவங்களைப் பெற்றிருத்தல் வேண்டும் என்றே நாம் எண்ணவேண்டியிருக்கிறது. வடமொழியில் எகர ஒகரங்கள் நெடிலையே குறிக்கும். அவற்றிற்கு