பக்கம் எண் :

இலக்கணக் கட்டுரைகள்
 
14

ஒவ

    ஒவ்வொரு பொருளுக்கும் தனிமொழியாயும் தொடர்மொழியாயும் ஒன்றும் பலவும் பெயரிருக்கு மென்றும், சொற்கள் தோன்றி ஊழிக் கணக்கான காலங்களாகி யிருத்தலின் அவற்றுட் பலவற்றின் பொருள்கள் இறந்தும் மறைந்தும் இருக்கின்றன வென்றும், வெற்றிலைக்கு ‘அடை‘ என்ற மறுபெயர் பண்டை நூல்களிற் கூறப்பட்டுள்ளதென்றும், அவரையினத்தைச் சேர்ந்த காய் கொத்தவரை யென்னப்பட்டாற்போல, மிளகினத்தைச் சேர்ந்த காய் மிளகா யென்னப்பட்டதென்றும், வழவழ வென்றிருப்பது வாழையென்றும், வெம்மையான காலத்தில் தழைப்பது வேம்பு என்றும் அந் நூலாசிரியர் அறிந்திலர் போலும்.

    இக்காலத்திற் சிலர் ஆங்கிலமுணர்ந்த மாத்திரையானே தமிழு முணர்ந்தமென்று தமிழாராயத் தொடங்குகின்றனர். அது நால்வர்  கண்ணிலார் நால்வாய் கண்ட தொக்கும்.

    இதுகாறும் கூறியவற்றை 'ஒன்றின முடித்தல் தன்னின முடித்தல்' என்னும் உத்தியாற் கொள்க.

8. போலி: (நன். 122, உரை)

    "முதற்போலி இடைப்போலிகளின்பின் முறையே சொல்ல வேண்டிய இவ் விறுதிப் போலியை முன்னே சொன்னதனால், சுரும்பு - சுரும்பர், வண்டு - வண்டர், சிறகு - சிறகர், இடக்கு - இடக்கர் எனச் சில குற்றியலுகரப் பெயரினிறுதி உகரத்துக்கு அர் என்பது  போலியாக வருதலும்...... கொள்க" என்பது.

    கடைப்போலியின் சிறப்புப்பற்றியும் அதன் பெருவழக்குப் பற்றியுமே அது முதலிற் கூறப்பட்டது. அது ஒருகால் ஒன்றைக் குறிப்பினும், பந்தல் - பந்தர், குடல் - குடர் போன்ற போலிகளே   கொள்ளப்படுமல்லது வண்டு - வண்டர், சிறகு - சிறகர் என்பவை  கொள்ளப்படா.

    குற்றியலுகரங்கள் மிகக் குறுகிய ஓசையுடையனவாய்ச் சொல்லுக் கீற்றிலிருப்பது உச்சரிப்பிற் கெளிதாயிராமைபற்றி அவற்றை (நீட்டி) எளிதாக்குவதற்கு அம், அல், அர், இ முதலிய சாரியைகள் வருவதுண்டு. அவை போலியாகா.  அர் என்பது போலியாயின்  ஏனையவும் போலி யாதல் வேண்டும். அவை சாரியையாதலின் அஃது போலியுரையென மறுக்க.

     எ-டு : குன்று  - குன்றம்
  நெஞ்சு - நெஞ்சம்
  இடக்கு - இடக்கர்
  வண்டு - வண்டர்
  சுக்கு - சுக்கல்
  குச்சு - குச்சி
  குஞ்சு - குஞ்சி

    'அர்' என்பது சாரியையாக நூல்களிற் கூறப்படவில்லை. ஆயினும், அது சாரியை யென்றே கொள்ளற்பாற்று. 'அல்' என்பதன் ஈற்றுப்போலி எனினும் அமையும்.