New Page 1
"எ-டு : உசு, இஃது உளுவின் பெயர்.
முசு, இது குரங்கினுள் ஒரு சாதி. பசு என்பதோவெனின், அஃது ஆரியச் சிதைவு. கச்சு குச்சு என்றாற்
போல்வன குற்றுகரம். உகரம் ஏறிய சகரம் இரு மொழிக்கு ஈறாமெனவே ஏனை உயிர்கள் ஏறிய சகரம்
பன்மொழிக்கு ஈறாமாயிற்று." (தொல். 75, உரை) என்றும்,
"உகரத்தோடு கூடிய பகரம் ஒரு
மொழிக்கல்லது பன்மொழிக்கு ஈறாகாதென்று கூறுவர் புலவர்"
"எ - டு : தபு என வரும்.......
உப்பு கப்பு என்றாற் போல்வன குற்றுகரம், உகரத்தோடு கூடிய பகரம் ஒன்றெனவே ஏனையுயிர்களோடு
கூடிய பகரம் பன்மொழிக்கு ஈறாய்ப் பல பொருள் தருமென்றாராயிற்று" (தொல். 76, உரை) என்றும்
நச்சினார்க்கினியர் கூறியிருத்தலை நோக்குக.
இதுகாறுங் கூறியவாற்றால்,
குற்றியலுகரம் உயிரீறே யென்றும், தொல்காப்பியர் ஓரிடத்தும் குற்றியலுகரத்தை மெய்யீறாகக்
கொண்டில ரென்றும் இயற்கையும் எளிமையும் தனிமையும் தாய்மையும் சான்ற தமிழியல்பை யறியாத ஆரியவழி
யியலாரே தம் மொழியைப் போன்றே தமிழும் ஆரிய வழித்தென்று மயங்கி, தமிழை வடமொழி வழித்தாகக்
காட்டக் கருதி அதற்கு முதற்படியாகக் குற்றுகர வீற்றை மெய்யீறாகக் கூறி யிடர்ப்பட்டுப் பின்பு
அவ் விடர்ப்பாட்டினின்று நீங்கப் பண்டைத் தமிழ்ச் சொற்கள் வல்லின மெய்யிலும் இற்றனவென்றும்,
வலியிரட்டல் என ஒரு திரிவு முறையும் அரவு என ஒரு தொழிற்பெயர் விகுதி இல்லையென்றும் சொல்லியல்
நூலுக்கும் மொழிநூலுக்கும் முற்றும் மாறாகத் தத்தம் உளந் திரிந்தவாறே உரைப்பரென்றும் தெற்றெனத்
தெரிந்துகொள்க.
- தொல்காப்பியம் எழுத்து
நச்சினார்க்கினியர் உரை 1944 |
|