2. தமிழ் தனி யியற்கை மொழியாதல்
தமிழ் தொன்றுதொட்டுத் தென்னாட்டில்
வழங்கி வருவதாலும், இன்றும் பிறமொழித் துணையின்றித்
தனித்தியங்கும் ஆற்றலுடைய தாதலாலும், எளிய
வொலிகளும் காரணச் சொற்களுமே கொண்டுள்ளமையாலும்,
ஒரு தனி இயற்கைமொழியாகும்.
தமிழ் குமரிநாட்டில் தோன்றிய தென்னும்
ஓர் உண்மையே, அதன் தொன்மையைப் புலப்படுத்தப்
போதிய சான்றாகும். குமரிநாடு (Lemuria)
எத்துணைத் தொன்மையானதோ அத்துணைத் தொன்மையானதே
தமிழும் என்க.
சமற்கிருதத்திற்கும் தமிழுக்கும் முறையே
வடமொழி தென்மொழி என்னும் பெயரமைந்ததே, தமிழ்
தென்னாட்டிற்கும் வடமொழி வடநாட்டிற்கும் உரியதென்பதையும்
தமிழ் வடமொழிக் கலப்பற்றதென்பதையும் உணர்த்தும்.
3. தமிழில் சொல் தோன்றிய வகைகள்
தமிழ்ச்சொற்கள் (1) இயற்சொல் (Primitive),
(2) திரிசொல் (Derivative)
என இருவகைப்படும். இயல்பாய்த் தோன்றியது இயற்சொல்லும்
அதனின்று திரிக்கப்பட்டது திரிசொல்லுமாகும்.
இயற்சொற்கள் தோன்றிய வகைகள் (1)
கத்தொலி (கா, கூ), (2) வாய்ச்சைகையொலி (ஆ, கௌ),
(3) குறிப்பொலி (படு, சல) என மூன்று. அவற்றுள், கத்தொலி
(1) உயர்திணையொலி, (2) அஃறிணையொலி, (3)
பொதுவொலி என மூவகைப்படும். வாய்ச்சைகையொலியும்
(1) சுட்டொலி, (2) சுட்டாவொலி என இருவகைப்படும்.
அவற்றுள், சுட்டொலியும் அவற்றின் திரிபுகளுமே இங்குக்
கூறப்படுவன. குறிப்பொலி பல திறத்தது; அவற்றுள்
முக்கியமானது ஒலிக்குறிப்பு.
இயற்சொற்கள் தோன்றிய மூவகைகளுள்,
வாய்ச்சைகையொலியின் ஒரு பாலான சுட்டொலிகளினின்றே,
தமிழில் பெரும்பாற் சொற்கள் தோன்றியுள்ளன.
ஆகையால், சுட்டொலிகளே தமிழுக்குப் பேரடிப்படையாம்
என்பதைத் தெரிந்துகொள்க.
4. தமிழ்ச்சொற்களின் காரணக்குறித் தன்மை
தமிழ் ஓர் இயன்மொழியாதலால், அதிலுள்ள
எல்லாச் சொற்களும் காரணக்குறியாம். இடுகுறி யென்பது
திரிமொழிகட்குரியது. வடமொழி யிலக்கணத்தைப்
பின்பற்றிப் பவணந்தியார் தமிழுக்கும் இடுகுறி கூறியது
பெருந்தவறாகும். கி.மு.2000 ஆண்டுகட்கு முற்பட்ட தொல்காப்பியத்தில்,
‘எல்லாச் சொல்லும் பொருள்குறித்
தனவே” (தொல். 640)
என்று கூறப்பட்டுள்ளது. ஆனால்,
சொற்கள் தோன்றிப் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாகிவிட்டமை
காரணமாகப் பலவற்றின் வேர்ச்சொல் மறைந்து போனமையாலும்,
அதனால் அவ் வேரடிச் சொற்களின் வேர்ப்பொருள்
|