பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என நால் வகுப்பாராயமைந்து மிக ஒழுங்குபட்டிருந்தனரென்றும் அப் பாகுபாட்டையே இந்தியப் பழங்குடி மக்களிடையும் புகுத்தினர் என்றும், மேலையர் தவறான கருத்தைக் கொண்டிருக்கின்றனர். ஆரியருட் பூசாரியர் தவிர ஏனைய ரெல்லாம் பழங்குடி மக்களொடு இரண்டறக் கலந்து போயினர் என்பதையும், அப் பூசாரியரே தமிழிலக்கண நூல்கள் கூறிய அந்தணர் முதலிய நால்வகுப்பைத் தமக்கேற்றவாறு திரித்து நால்வகைப் பெருங்குலங்களை அமைத்து விட்டனர் என்பதையும் அவர் அறியார். ஆரிய நால்வரணம் நிற அடிப்படையில் அமைந்தது. நாலாம் வரணத்தானான சூத்திரன் நிறம் கருப்பு. அவன் தொழில் கைத் தொழிலுங் கூலி வேலையும். தமிழவேளாளர் நிறமோ பொன்மை. அவர் தொழிலோ உழவு. ஆதலால் சூத்திரரென்று அவர் தம்மைக் கருத வேண்டியதில்லை. தமிழ நால்வகுப்பு இலக்கண நூலிற் குரியதேயன்றி நடைமுறைக் குரியதன்று. கைத்தொழிலாளரும் கூலி வேலைக் காரரும் உழவர்க்குப் பக்கத் துணைவரென்றே கொள்ளப்பட்ட தனால் அவர்கள் தொழில்களெல்லாம் உழவில் அடக்கப்பட்டு விட்டன.ஆகவே அவர்கட்குத் தலைமையில்லாது போயிற்று. ஆரியப் பூசாரியர் தமிழ வேளாளரை இழிவுபடுத்தற் பொருட்டே தொழிலாளரையும் கூலிக்காரரையும் நாலாம் வகுப்பினராக்கி நாலாம் வகுப்பினர்க்குரிய உழவுத்தொழிலை மூன்றாம் வகுப்பினரான வணிகர் தொழிலொடு சேர்த்து விட்டனர். இது இயற்கைக்கு மாறானதாகும். இனி ஆனைந்து பிராமணர்க்கு மிகத் தேவையானதனால், ஆயர் தொழிலான ஆவோம்பலையும் வணிகர்க்குரிய தாக்கினர். நாலாம் வகுப்பு எண் வரிசை யொன்றே தமிழ வேளாளரை ஆரிய வகுப்புச் சூத்திரரோடு இணைக்க இடந்தந்தது. தமிழ வணிகர்க்கு வணிகஞ் செய்தல் ஒன்றே யன்றி வேறு தொழிலில்லை. தமிழ வேளாளர்க்கும் உழவுத்தொழில் ஒன்றே யன்றி வேறு தொழிலில்லை. "வைசிகன் பெறுமே வாணிக வாழ்க்கை." (தொல். மர. 79) |