பக்கம் எண் :

132மண்ணில் விண் அல்லது வள்ளுவர் கூட்டுடைமை

இருமடங்கும் மும்மடங்கும் குறுகி வரும்போது, நகரமைப் போர் பழமையான பழனங்களைப் பாழாக்கி வருவது மிகமிக வருந்தத் தக்க செய்தியாகும். வேலூர்க் காட்டுப்பாடி விரிவும் திருச்சிராப்பள்ளித் தில்லைநகரமைப்பும் பழனப் பாழுக்குச் சிறந்த எடுத்துக் காட்டாம். இனிமேலாயினும் இப் பொருளாட்சிக் கேட்டைப் பெருக்காவாறு, அரசு மிக விழிப்பாயிருத்தல் வேண்டும்.

  புதிய நகரமைப்புகளிலும் குடியேற்றங்களிலும், மறுகுகளும் (வீதிகளும்) தெருக்களும் சந்துகளும் நேராகவும் பொருத்த விழுக்காட்டின்படி
(proportionately) அகன்றும் இருத்தல் வேண்டும். குடிநீர், தெருவிளக்கு, மின்னிணைப்பு, நகரியங்கி (town bus) , கல்விநிலையம், காவல்நிலையம், அஞ்சல்நிலையம், மருத்துவச் சாலை, நகரமண்டபம், மண மண்டபம், கடைத்தெரு முதலிய ஏந்துகளும் (வசதிகளும்) நடுவில் ஒரு சதுக்கம் அல்லது வட்டத் திடலும் எல்லா நகரமைப்புகளும் கொண்டிருத்தல் வேண்டும்.
 

17. தலைநகர் விரிவு (Metropolitan Development)

  சென்னையில் ஏற்கெனவே புறநகர்கள் (Suburbs) அளவிற்கு மிஞ்சி அமைந்துள்ளன. 1971 குடிமதிப்பின்படி சென்னை மக்கள் தொகை 24,69,449. இன்று 25 இலக்கமும் மேலும் இருக்கலாம்.

  புதிய புறநகரமைப்பால் மிகுந்த விளைநிலம் பாழாக்கப் பட்டுள்ளது. இனி, சார்நகர்களும்
(Satellite towns) அமையின், இன்னும் மிகுதியாக விளைநிலம் குறையும். ஆதலால், வீண் பெருமை பாராட்டாது இத் திட்டத்தை விட்டுவிடுவதே நல்லது. வீடுகளும் கட்டடங்களும் நிலத்தின்மேற் கட்டுவதை இனி நிறுத்திவிடல் வேண்டும். பழைய கூரைவீடுகளையும், ஓட்டுவீடுகளையும், இடித்து விட்டு எழுநிலை மாடிகள் கட்டவேண்டும். வணிகத்திற்கும் அலுவலகத்திற்கும் சிகாகோ விற் (Chicago) போல் எழுபதும் எண்பதும் நிலைகள் கொண்ட வானளாவிகள் (Sky-scrapers) எழுப்புதல் வேண்டும். வான வெளியையன்றி நிலப்பரப்பை இனிமேற் கட்டடத்திற்குப் பயன்படுத்தல் கூடாது. தொழிற் சாலைகளும் மருத்துவச்சாலைகளும் ஆட்டுப் பண்ணைகளும் கோழிப் பண்ணைகளும் போன்றவைதாம் நில மட்டத்தில் இருத்தல் வேண்டும்.