பக்கம் எண் :

தமிழ்நாட்டு அரசின் கடமை131

கரணியமாயிருத்தலால், கள்வருக்கு ஒற்றர் வேலையும் கொள்ளைக்காரருக்குப் படைத்துறை வேலையும் கொடுப்பின், ஓரளவு நிலைமை திருந்தலாம்.

  இனி, கள்ளக் காசுத்தாளடிப்பாரையும் கள்ளத் தனமாகத் துமுக்கி (gun), சுழலி (revolver) முதலியன செய்வாரையும், பொறியாக்கத் தொழிலிற் பயிற்றின், சிறந்த பொறிவினைஞராகவோ புதுப் புனைவாளராகவோ தலையெடுக்கலாம்.

15. வீடமைப்பு

  மண்சுவருங் கூரையுங் கொண்ட குடிசைகளும் வீடுகளும், ஆண்டுதோறும் அடைமழையிற் சேதமாவதும், புயன்மழை தோறும் இடிந்துவிழுவதும், அடிக்கடி தீக்கோட்பட்டு எரிந்து போவது மாயிருத்தலால்,ஒரேயடியாகக் கற்சுவரும் மச்சுமாகக் கட்டிவிடின், ஆண்டுதோறும் நேரும் அழிவும் நீங்கும், செலவும் இராது. கட்டுதற் செலவிற்கு அரசு கடன் கொடுத்துதவலாம்.

  செங்கற் சுடுவதற்குப் பலவிடத்தும் மண்ணெடுத்து விளை நிலங் குன்றியிருப்பதால், இனிமேற் கட்டட வேலைக்கெல்லாம், மரஞ் செடி கொடிகள் இல்லாதனவும் விளைநிலமல்லாதனவுமான பாறைகளிலும் பொற்றைகளிலுமிருந்து கல்வெட்டியெடுத்தே பயன்படுத்தல் வேண்டும். நாடுமுழுதும் பாறையும் பொற்றையும் மிகுந்திருப்பதால், கல்லிற்குப் பஞ்சமில்லை. கற்கட்டடம் உறுதியாயிருக்கும். பொற்றைகள் நிலமட்டமாகி விடின் வீடமைப்பிற்கும் சாலையமைப்பிற்கும் இடமுங் கிடைக்கும்.

  உழவர் வீடுகளும் ஆயர் வீடுகளும் தொழிற் சாலைகளும் தவிர ஏனையோர் வீடுகளெல்லாம் மேனோக்கியன்றிப் பக்கவாட்டில் விரிவடைதல் கூடாது. அமெரிக்காவிற் போல் 50 அல்லது 60 நிலைக் கட்டடங்கள் எழாவிடினும், 5 அல்லது 6 நிலைக்கட்டடங்கள் ஆயிரக்கணக்காக எழலாம். மண்டபங்களும் கோவில்களும் கல்லாலேயே அமைதல் வேண்டும்.


16. நகரமைப்பு

நகரமைப்பு, முற்கூறியவாறு பாலைநிலத்திலும் பாறை நிலத்திலும் அமைதல் வேண்டும். மக்கட்டொகை மட்டிற்கு மிஞ்சி இரு மடங்கும் மும்மடங்கும் பெருகி, விளைநிலம்