பக்கம் எண் :

150மண்ணில் விண் அல்லது வள்ளுவர் கூட்டுடைமை

ஆங்கிலம் அறிவியன் மொழியும் உலக மொழியுமா யிருப்பதுடன், எதிர்காலத்தில் ஒரே உலகப் பொது மொழி யாகும் வாய்ப்பு முள்ளது என்பதை அறிதல் வேண்டும்.

  ஆங்கிலம் தானே இங்கு வந்திராவிடின், இந்தியர் மேனாடு சென்று வருந்தித் தேடி அதைக் கண்டுபிடிக்கும் நிலைமை நேர்ந்திருக்கும். அது தானே இங்கு வந்ததனால், "வலிய வந்தாற் கிழவி" என்பது போல், அதன் அருமை பெருமை அறியப்படாதுள்ளது. இற்றை யறிவியற் கெல்லாம் அடிப்படையான நீராவி வலிமையும் மின்னாக்கமுங் கண்டுபிடிக்கப்பட்ட நாட்டுமொழியாகிய ஆங்கிலம், இந்தியர்க்குக் கிடைத்தது, இறைவன் பேரருள் என்றும், ஆங்கிலர் வன் கொடையென்றும், வலிய வந்த வானமுதம் என்றும் போற்றத் தக்கதாகும்.


5. இந்தி ஆங்கிலத்திற்குச் சமமன்மை


  பழம் என்ற பெயரளவில் பலாப்பழமும் களாப்பழமும் ஓரினமாகும். அதுபோன்று, மொழியென்ற பெயரளவில் ஆங்கிலமும் இந்தியும் ஓரினமாகும். ஆயின், அவற்றிடைப் பட்ட வேற்றுமை யானைக்கும் பூனைக்கும் இடைப்பட்ட தாகும். "அரசன் முத்தினால் அரம்பை" என்பதற்கு எடுத்துக் காட்டாக இன்று இந்தி வடஇந்தியாவிற் பெருமைப்படுத்தப்பட்டுள்ளது. பிரித்தானியக் கலைக்களஞ்சியம்
(Encyclopaedia Britannica) போன்ற முதனூல் (original work) இந்தியில் அமையும் வரை இந்தியும், அமெரிக்கரைப் போல் திங்களையடையும் வரை இந்தியாரும், ஏற்றம் பெற இயலாது. காக்கைக்கு எதிரில் நின்றுகொண்டு காக்கை கண்கூசும் வெள்ளை யென்பார், தம்மையும் தம் மொழியையும்பற்றி என்ன வேண்டுமாயினும் சொல்லலாம். ஆயின், "கேழ்வரகில் நெய் ஒழுகுகிறது என்றால் கேட்பார்க்கு மதியில்லையா?"

  இந்தி ஆங்கிலத்திற்குச் சமமா என்பதை இருவகையில் ஆய்ந்து பார்க்கலாம். பதினாறாம் நூற்றாண்டு வரைப்பட்ட இந்தியிலக்கியத்தை மட்டும் கற்ற ஒரு புலவரை, ஆங்கிலத்தில் இளங்கலைப்
(B.A.) பட்டம்பெற்ற ஒருவருடன், இக்காலப் பொருள் ஏதேனும் ஒன்றுபற்றிச் சொற்போட்டியிடுவித்தல் ஒன்று; ஆங்கிலத் தொடர்பற்ற ஓர் இந்தி யகரமுதலியைப் படித்தவரை, ஆக்கசுபோர்டு ஆங்கிலச் சிற்றகரமுதலியைப் (The Concise Oxford Dictionary) படித்தவரொடு, இக்காலத்திற்கேற்ற