20. ஐந்து மொழிகளில் ஒன்றிய நாடுகளின் நடபடிக்கைகள் நடந்து வருவது ஒற்றுமைக்குப் பொருந்தாமை. ஏற்கெனவே பல மொழிகள் நடப்பு மொழிகளா யிருப்பதால், அரபியர் அரபி மொழியையும் இந்தியார் இந்தி மொழியையும் அவற்றொடு சேர்த்து இருக்குங் குழப்பத்தைப் "பாபேல்" போற் பெருக்கக் கருதுகின்றனர். உலகப் பொதுக் கழகத்திற்கு ஒரு மொழியே இருத்தல் வேண்டும். அதற்கு எல்லா வகையிலும் ஏற்றது ஆங்கிலம் ஒன்றே. 21. மாந்தன் வரலாறு சரியாக எழுதப்படாமை ஒன்றிய நாட்டினங்களைச் சேர்ந்த கல்வியறிவியற் பண்பாட்டு அமைப்பகம் (UNESCO) , மன்பதை வரலாறு (History of Mankind) 6 மடலங்களாகத் தொகுத்து வெளியிட்டுள்ளது. அதன் முதன் மடலத்தில் மாந்தன் பிறந்தகம் திட்டவட்டமாய்க் கூறப்படவில்லை. ஒவ்வொரு மாந்தனூலாராய்ச்சியாளரும், பெரும்பாலும் நடு நிலைமையின்றித் தாந்தாம் விரும்பியவாறே ஒவ்வோரிடத்தைக் குறித்துள்ளனர். பேரா. எக்கேல் (Prof. Haeckel) மடகாசுக்கர்த் தீவுப் பக்கத்தை மாந்தன் பிறந்தகமாகக் குறித்தார். இன்று தென்னாப் பிரிக்காவில் மாந்தனூலாராய்ச்சி செய்துவரும் இலீக்கி (Leakey), கென்யாவை மாந்தன் தோன்றிய இடமாகக் கருதுகின்றார். இவ் வீரிடத்தையும் அடுத் திருந்த குமரி நாடே, மாந்தன் பிறந்தகமும் தமிழன் தோன்றிய இடமு மாகும். 22. ஒப்பியன் மொழிநூல் (ComparativePhilology) உண்மையான வளர்ச்சி பெறாமை. மேலையர், இயன்மொழியாகிய தமிழை ஆராயாது, திரிமொழியின் திரிமொழியாகிய வேதமொழியையும் அதன் இலக்கிய வளர்ச்சியான சமற்கிருதத்தையும் இந்தை ரோப்பிய மொழிகட்கு அடிப்படையாக வைத்தாராய்ந்ததனால், மூல மொழியைக் கண்டுபிடிக்க முடியாது, வரலாற்றை விலக்கிய வண்ணனை மொழி நூலைத் தவறாக வளர்த்து வருகின்றனர். இதற்கு அவரது ஆரிய வெறியே கரணியம். 7. உலக ஒற்றுமைக்கு வழிகள் 1. உலகப் பொது ஆட்சி (International Govt.) அமைத்தல் மக்களெல்லாரும் ஓரினம் என்றும் உலக முழுவதும் ஒரு மாபெருங் குடும்பமென்றும் ஒப்புக்கொண்டு, ஒவ்வொரு |