பக்கம் எண் :

200மண்ணில் விண் அல்லது வள்ளுவர் கூட்டுடைமை

மடக்கி, குற்ற மற்றவரும் தொடர்பில்லாதவருமான பெண்டிரும் சிறுவரு முள்ளிட்ட நூற்றுக்கணக்கான பன்னாட்டு மக்களை ஒரு பொறித் துமுக்கி (machine gun) முன் நிறுத்திக்கொண்டு, தன் நண்பனை உடனே விடுதலை செய்யாவிடின் அவரனைவரையும் ஒரே நொடியிற் சுட்டுக் கொல்வதாக அச்சுறுத்துவது, கொடுமையிற் கொடுமையாகும். வல்லரசுகள் உட்பட 135 நாடுகள் கூடிய ஒன்றிய நாட்டினங் கள், ஊர்திமடக்கிய ஒரு தனிப்பட்ட சிறு கயவனையும் வெல்ல வழியின்றிச் செயலற்று வருந்துவதற்கு, ஒற்றுமையின்மையே கரணியம். ஊர்தி மடக்கியவனை மட்டுமன்றி அவனுக்கு உடந்தையாயிருந்த நாடுகளையும் கடுமையாய்த் தண்டித்தல் வேண்டும்.
 
   இனி, மாபெருஞ் செல்வம் விரைந்து கவர்தற்கு ஊர்தி மடக்கலும், பிள்ளை களவாடலும்
(kidnapping), ஆட்கவர்வும், இற்றையரசுகள் விலக்கமுடியாத கொலைக் கொள்ளைகளாகும்.
 
   கடிதக் குண்டுகள்
(letter bombs), சிப்பக் குண்டுகள் (parcel bombs) முதலியன விடுத்தல், கட்டடத்திற்கு உள்ளும் புறம்பும் வழியிலும் நேரக் குண்டுகளைப் (time bombs) பதித்தல், தண்டவாளங்களைப் பெயர்த்தல், எதிர்க்கட்சியாரைத் தாக்குதல், அதிகாரிகளையும் அமைச்சர்களையும் அஞ்சல் வாயிலாகவும் தொலைபேசி வாயிலாகவும் மொட்டைக் கூற்றாக அச்சுறுத்தல் முதலிய பல்வகை அச்சுறுத்தத்தை அடியோடு நீக்குதல் வேண்டும்.
 
 15. ஒரு நாட்டார் இன்னொரு நாட்டிற் கல்விகற்கவோ பணியாற்றவோ சுற்றிப் பார்க்கவோ இயலாமை.
 16. உறுப்பு நாடுகள் கூட்டுச் செயலின்றித் தனித்தனியாக ஒவ்வொரு நாட்டுடன் ஒப்பந்தஞ் செய்துகொள்ளுதல்.
 17. போரை நிறுத்தாமை.
 18. படைக்குறைப்பின்மை.
 19. மாந்தன் வாழ்க்கையில் மனவமைதியின்மை.
 
   செல்வஞ் சிறந்த நாடுகளிலும் தற்கொலை மிகுந்து வருவதால், ஏதோ ஒரு குறை சிலர் மனத்தை வாட்டி வருவதாகத் தெரிகின்றது. அதைக் கண்டுபிடித்து அதைத் தீர்த்தல் வேண்டும்.