(accident), வாய்ப்பு (chance), கொள்ளை, வன் செயல் என்னும் நால்வகைப் பட்டனவே. உறுப்பிலிகளும் நோயாளியரும் களைகணில்லாச் சிறுவரும் பொருளீட்டலினின்று இயற்கையால் தடுக்கப்பட்டவராவர். கல்வித் திறமையில்லார் உடம்புழைப்பாலேயே பிழைத் தற்குரியார். தாழ்த்தப்பட்டோர் பிற வகுப்பார் கூட்டுறவினாற் பொருளீட்டும் வழிகளினின்று தீண்டாமை யாற் பெரும்பாலும் விலக்கப்பட்டவராவர். பெருமுயற்சி செய்தற்கு உடல்வலிமை, நோயின்மை, மதிவன்மை, மனவூக்கம், இடம்பொருளேவல், வாழ்நாள் நீடிப்பு, வானிலை, திருவருள் முதலிய பலவும் ஒத்துவரல் வேண்டும். இவை யெல்லாம் ஒத்துவருவதே ஒரு வாய்ப்பு வகையாகும். எல்லாரும் பெருமுயற்சி செய்தலும் இயலாது. எல்லாருஞ் செல்வராயின் ஏவல்செய்ய ஒருவருமிரார். எல்லாரும் முதலாளி களாயின் தொழிலாளி ஒருவருமிரான். தொழிலாளி யுதவியின்றி முதலாளி பொருளீட்ட முடியாது. ஆதலால், பெரும் பொருளீட்டும் வாய்ப்புள்ளவ ரெல்லாம், அஃதில்லாத ஏழைமக்களுடன் பகிர்ந்துண்ணுதலும், இரப்போர்க்கு இட்டுண்ணுதலும் வேண்டும். இருப்பது பொய்; இறப்பது மெய். ஆறிலுஞ் சாவு; நூறிலுஞ் சாவு. தேவைக்கு மிஞ்சின பணமும் இறந்தபின் எஞ்சும் பணமும் வீண். எல்லார்க்கும் வேலையும் தேவையும் கிடைப் பின், கவலைக்கிடமில்லை; பிள்ளைகட்குத் தேடி வைக்கவும் வேண்டியதில்லை. மக்கட்டொகையை மட்டும் மட்டுப்படுத்தல் வேண்டும். எல்லார்க்கும் மூப்புச் சம்பளம் கிடைக்கும்போது பெற்ற மக்களுதவியும் வேண்டியதில்லை. மாளும்வரை மானத்தொடு வாழலாம். மக்கட்டொகை மிக்க காலத்திற்கு ஏற்றது கூட்டுடைமை யரசே. தனியுடைமை நாடுகளும் இன்று படிப்படியாகக் கூட்டுடைமைக் கொள்கைகளை மேற்கொண்டும் கையாண்டும் வருகின்றன. நெடுங்காலஞ் செல்லினும், இறுதியில் அமெரிக்க ஒன்றிய நாடுகளும் (USA) கூட்டுடைமையை ஏற்கத்தான் நேரும். கூட்டுடைமைத் தொடக்கக் காலத்தில், அதைக் கை யாளும் நாடுகளிற் சில ஆட்சித் தவறுகளும் குறைபாடுகளும் |