பக்கம் எண் :

வள்ளுவர் கூட்டுடைமை33

1
வள்ளுவர் கூட்டுடைமை


1. வள்ளுவர் கூட்டுடைமை யியல்பு


"பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் இல்வாழ்க்கை
 வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல்."
(குறள். 44)


  பொருளீட்டும்போது தீவினைக்கு அஞ்சி நல்வழியில் ஈட்டியும், பிறருக்குதவாவிடின் ஈயாத புல்லன், கன்னெஞ்சன், தன்னலக்காரன், மக்கட்டன்மை யில்லாதவன் என்று பலவாறு பிறர் தன்னைப் பழித்தற் கஞ்சியும், தன் பொருளை அஃதில்லாத பலரொடும் பகிர்ந்துண்ணும் இயல்புடைய இல்வாணனது குடிவழி, எதிர்காலமெல்லாம் தொடர்ந்தியங்கும்.


"பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னும்
 தீப்பிணி தீண்டல் அரிது."
(குறள். 227)


  எப்போதுந் தன் பொருளைப் பலரொடும் பகிர்ந் துண்டலை இயல்பாகக் கொண்டவனைப் பசியென்னும் கொடிய நோய் ஒருபோதுந் தாக்காது.


"இறைக்க வூறும் மணற்கேணி, ஈயப்
 பெருகும் பெருஞ் செல்வம்."
(பழ.)

"பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
 தொகுத்தவற்று ளெல்லாம் தலை."
(குறள். 322)

  ஒருவன் தன் பொருளை அல்லது உணவைப் பலரொடும் பகிர்ந்துண்டு பலவகையுயிர்களையும் பாதுகாத்தல், அறநூலார் இருவகையறத்தார்க்குந் தொகுத்த அறங்களெல்லாவற்றுள்ளும் தலையாயதாம்.

  பொருள் ஒருவர் துறக்குமுன் கொண்டிருந்ததாகவோ, துறந்தபின் பெற்ற நன்கொடையாகவோ இருக்கலாம். இனி, மடத்துச் செல்வம் போன்று ஒருவர் ஆட்சிக்குட்பட்டதாகவு மிருக்கலாம்.