அதிகாரம், செல்வம் ஆகிய மூன்றிற்குஞ் சிறப்புக் கொடுத்து அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் எனத் தலைகீழாக மாற்றி விட்டனர்.
வேளாளர் என்பார், உழுதுண்பார் உழுவித்துண்பார் என இருவகையர். முதற்காலத்தில் உழவர் என ஒரே வகுப்பாரா யிருந்த மருதநில மக்களே, பிற்காலத்திற் செல்வமுண்மையும் இன்மையும்பற்றி இங்ஙனம் இருவகையராகப் பிரிந்தனர். உழுவித்துண்பார் நிழல் வாழ்வாலும் சிறந்த வுணவாலும் பொன்னிறமடைந்து வெள்ளாளர் என்றும், உழுதுண்பார் வெயிலுழைப்பாலும் எளிய வுணவாலும் கருநிறம் மிக்குக் காராளர் என்றும் பெயர் பெற்றனர். இவரை முறையே, வெண்களம ரென்றும் கருங்களம ரென்றுங் கூறுவது இலக்கிய வழக்கு.
தமிழ்நாடு நண்ணிலக்கோட்டை யடுத்திருப்பதால், பொதுவாக, வடஇந்தியரினுந் தென்னிந்தியர் சற்றுக் கருத்திருப்பர். வடக்கே செல்லச் செல்லப் பொன்னிறத்தர் மிகுந்தும், தெற்கே வரவர அவர் குறைந்தும், இருப்பது கண்கூடு. தென்னாட்டுக் காராளர் கருநிறஞ் சிறந்தவர்.
தொழில்பற்றியும் தொண்டுபற்றியும் உழவனே உயர்ந்தவ னேனும், நிற (வரண) அடிப்படையிலும் பிறப்படிப்படையிலும் மக்கட்கு உயர்வு தாழ்வு வகுத்த ஆரியப் பூசாரியர்க்குத் தமிழ் மூவேந்தரும் அடிமைப்பட்டுப் போனதினால், வெள்ளாளன் சூத்திரன் என்றும், காராளன் பஞ்சமன் அல்லது தீண்டாதவன் என்றும் இகழப்பட்டனர்.
இனி, நிலத்தை உழும்போது பூச்சி புழுக்கள் கொல்லப்படு வதனால், உயர்ந்தோர் உழவுத்தொழிலைத் தாழ்ந்ததென்று தள்ளி விட்டனர் என்று மனுதரும சாத்திரம் கூறுவதோ, எள்ளி நகையாடத் தக்கதாகும். இன்று நன்செய் புன்செய்களிற் பூச்சி மருந்தடிப்பவ ரெல்லாம் அதன்படி கொலையாளியராவர்.
வேறு எத்தொழில் நின்றுபோயினும் மக்கட்குக் கேடில்லை. உழவுத்தொழில் நின்றுவிடினோ, ஒருசிலரே இயற்கை யுணவுண்டு எஞ்சியிருப்பர். உலகப்பற்றை முற்றுந் துறக்குந் துறவறமும் நிகழாது.