பக்கம் எண் :

112

     ‘தலையில் அடித்துக்கொண்டு’ என இயல்பாக வேற்றுமை உருபோடு
எழுதப்பட்டிருப்பதைத் தொடர்ந்து ‘இல்’ உருபு இல்லாமல் வரும் ‘சுவர் முட்டி’ என்பது
முரண்பாடாகவும் பொருத்தமற்றதாகவும் இருக்கிறது.
 
(28) நாற்பது ஆண்டுகள் முன்பு தொடங்கப்பட்ட பத்திரிகையில் ...
 
     ‘நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு’ என வேற்றுமை உருபு சேர்ந்துவருவதே
இயல்பானது. ‘கு’ உருபு இல்லாதது பொருளைப் புரிந்துகொள்வதற்குத் தடையாக இல்லை
என்றாலும் குறை என்ற உணர்வைத் தருகிறது.

     தமிழில் சில சொற்கள் இட வேற்றுமை உருபாகிய ‘இல்’ இல்லாமலேயே இடத்தை
உணர்த்தும் ‘அங்கு’, ‘அப்பால்’, ‘இங்கு’, ‘எங்கு’ போன்ற சொற்கள் இத்தகையவை.
இவற்றுடன் ‘இல்’ உருபு சேர்ப்பதில்லை
 
 
  (29) எல்லைக்கு அப்பாலிலிருந்து பொருள் கடத்தப்பட்டதாகத் தெரிகிறது.
 
     ‘அப்பாலிலிருந்து’ (அப்பால்+இல்+இருந்து) என்பதிலுள்ள ‘இல்’ உருபு தேவையற்றது.
‘கப்பலிலிருந்து’ என்பதில் ‘இல்’ இருப்பதால் அதே அமைப்பில் ‘அப்பால்’ என்பதிலும்
‘இல்’ தவறாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

2.1.2 இடைச்சொற்கள்: ஏ, உம், ஓ
 
     ‘ஏ’ என்னும் இடைச்சொல் பொருளுக்கு அழுத்தம் தருவதற்காகச் சொல்லுடன்
சேர்க்கப்படுவதுண்டு. ஆயினும், சில சொற்களோடு ‘ஏ’ என்பது எப்போதும் சேர்ந்தே வழங்குகிறது. அந்தச் சொல்லிலிருந்து ‘ஏ’ என்பதை எடுத்துவிட்டால் அது வேறு
சொல்லாகவோ உருபாகவோ ஆகிவிடும்.
 
  (30) உங்களுக்கு இப்போது உடன் புரியாது.
 
     இங்கு பயன்படுத்தியிருக்க வேண்டிய சொல் ‘உடனே’ என்பதாகும். ‘உடனே’
என்பதும் ‘உடன்’ என்பதும் இலக்கண வகையில் வேறானவை. ‘உடனே’ என்பது
வினையடை; ‘உடன்’ என்பது பெயர்ச்சொல்லோடு வரும்போது வேற்றுமை உருபாகவும்
(‘தாயுடன்’) இறந்தகாலப் பெயரெச்சத்தோடு வரும்போது பின்னொட்டாகவும் (‘வந்தவுடன்’)
இருக்கும். வினையடையான ‘உடனே’ என்பதில் உள்ள ஏ’ என்பதை நீக்கிவிட்டு அதை
வினையடையாகப் பயன்படுத்தியிருப்பது சரியல்ல: மேலும்,