இந்த வாக்கியத்தில் ‘இப்போது’, ‘உடனே’ ஆகிய இரண்டு சொற்களுள் ஒன்று போதுமானது. ஒரு வாக்கியத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட பெயர்களும் செயல்களும் இடம்பெறும்போது அவற்றைத் தொடர்புபடுத்த ‘உம்’ என்னும் இடைச்சொல் பயன்படுத்தப்படுகிறது. பெயரோடு செயலையோ செயலோடு பெயரையோ ‘உம்’ கொண்டு தொடர்புபடுத்திச் சொல்ல முடியாது. செயல்களை இணைக்கும்போது செயல்களைக் குறிக்கும் சொற்களோடு ‘உம்’ சேர்க்கப்படுவது வாக்கியம் சீராக அமைய உதவும். |
| (31) குளிக்காமலும் அழுக்கடைந்த சட்டையும் அணிந்துகொண்டு - வரக் கூடாது. |
இதில் ‘உம்’ இரண்டாவதாக வரும்போது செயலைக் காட்டும் ‘அணிந்து கொண்டு’ என்பதோடு சேர்க்கப்படாமல் ‘சட்டை’ என்ற பெயர்ச்சொல்லில் சேர்க்கப்பட்டிருப்பதால் இரு செயல்களை இணைக்கத் தவறிவிடுகிறது; இந்தத் தவறான இணைப்பால் வாக்கியம் நெருடுகிறது. ‘உம்’ என்னும் இடைச்சொல்லை ‘போல’ என்பதோடு சேர்க்கும்போது கவனம் தேவை. |
|
| (32) தணிக்கை அதிகாரி இறுதித் தீர்ப்பே அளித்துவிட்டது போலும், அந்தத் தீர்ப்பில் ராஜீவ் காந்தியைக் குற்றவாளி என்று அவர் கண்டுபிடித்துள்ளது போலும் மக்களிடையே எடுத்துக்காட்ட |
‘போல’ என்பதோடு ‘உம்’ சேர்த்தால் அது ‘போலவும்’ என்றே எழுதப்படும். ‘போலும்’ என்பது ‘போல்’ என்ற வினையின் (அஃறிணை) முற்று வடிவம். மேற்காட்டிய வாக்கியத்தில் ‘போலவும்’ வர வேண்டிய இடங்களில் ‘போலும்’ பயன்படுத்தப்பட்டதால் பொருளைப் புரிந்துகொள்வதில் குழப்பம் நேர்கிறது. ‘போலவும்’ என்பதற்குப் பதிலாக ‘போன்றும்’ என்பதும் பயன்படுத்தப்படலாம். |
| (33) ஆசிரியர்களின் ஆசிரியரான டாக்டர் ராதாகிருஷ்ணனின் வாழ்க்கை வரலாறு எத்தனை ஆசிரியர்களுக்கோ அல்லது மாணவர்களுக்கோ தெரியும்? |
இங்கு ‘அல்லது’ என்னும் பொருள் தரும் ‘ஓ’ என்னும் இடைச்சொல்லோடுகூட ‘அல்லது’ என்பது பயன்படுத்தப்பட்டிருப்பதில் பொருள் நுட்பம் இல்லை. ‘அல்லது’, என்பதை இங்கு நீக்கிவிட்டாலும் இந்த வாக்கியத்தில் ‘ஓ’ என்பதன் ஆட்சி தவறானதே. ‘எத்தனை ஆசிரியர்களுக்கு அல்லது மாணவர்களுக்கு’ என்பது மட்டுமே இந்த வாக்கியத்திற்குப் பொருத்தமானது. |